இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம்!

இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம்!

பிரயாக்ராஜில் நடந்த வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விமானப்படை தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது.


புதுதில்லி: பிரயாக்ராஜில் நடந்த வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் 72 வருடங்களுக்குப் பிறகு இந்திய விமானப்படை தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படையின் மதிப்புகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய விமானப்படைக்கு ஒரு புதிய கொடி  உருவாக்கப்பட்டு இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் உள்ள பம்ராலி விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர இந்திய விமானப்படை நாள் அணிவகுப்பில், விமானப்படையின் புதிய கொடியை விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி அறிமுகம் செய்து வைத்தார். 72 வருடங்களில் விமானப்படை நாள் அணிவகுப்பில் இதுபோன்ற பயிற்சியை விமானப்படை மேற்கொள்வது இதுவே முதல் முறை.

புதிய கொடியில், அசோக சின்னமும், அதன் கீழே தேவநாகரியில் 'சத்யமேவ ஜெயதே' என்ற வார்த்தைகளுடன் அசோக சிங்கம் உள்ளது. அசோக சிங்கத்தின் கீழே இறக்கைகளை விரித்தபடி பறக்கும் இமயமலைக் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது விமானப்படையின் போர் குணங்களைக் குறிக்கிறது. வெளிர் நீல நிறத்தில் ஒரு மோதிரம் இமயமலைக் கழுகைச் சுற்றி 'பாரதிய வாயு சேனா' என்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளது.

இமயமலை கழுகுக்கு கீழே தேவநாகரியில் 'மகிமையுடன் வானத்தைத் தொடவும்' என்ற விமானப்படை பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பொன்மொழியானது பகவத் கீதையின் 24 ஆவது அத்தியாயம், 11 ஆவது பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் புதிய கொடி, ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது.

விழாவில் விமான சாகசங்களும், பாராசூட் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், 5 நிமிடங்களுக்குள் ஜீப் ஒன்றை முழுவதுமாக பிரித்து மீண்டும் அதனை விமானப்படை வீரர்கள் அசெம்பிள் செய்தனர்.

பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்ற இந்த விழாவை விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com