26 வார கரு விவகாரம்: குழந்தையைக் கொல்ல முடியாது - உச்ச நீதிமன்றம்

26 வார கருவைக் கலைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒரு குழந்தையைக் கொல்ல முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
26 வார கரு விவகாரம்: குழந்தையைக் கொல்ல முடியாது -  உச்ச நீதிமன்றம்

புது தில்லி: 26 வார கருவைக் கலைக்க அனுமதித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒரு குழந்தையைக் கொல்ல முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

ஒரு பிறக்காத குழந்தையின் உரிமைகளை, "வாழும் மற்றும் வாழ்வதற்கு சாத்தியமான கரு" மற்றும் அதன் தாயின் முடிவெடுக்கும் தன்னாட்சி உரிமையை உச்ச நீதிமன்றம் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்னும் ஒரு சில வாரங்களுக்கு கருவை தக்கவைத்துக்கொள்ளுமாறு பெண்ணிடம் மத்திய அரசையும் அவரது வழக்கறிஞரையும் பேசுமாறு கேட்டுக் கொண்டது.

மேலு, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் கருவின் இதயத்தை நிறுத்துமாறு நாங்கள் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என 27 வயது பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு இல்லை என வழக்குரைஞர் பதிலளித்தார்.

கடந்த 24 வாரங்கள் கருவை சுமந்த பெண்ணால், இன்னும் ஒரு சில வாரங்கள் கருவை சுமக்க முடியாதா? அவ்வாறு செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமே என்று கூறி, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

திருமணமான பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை புதன்கிழமை அளித்தனா்.

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971-இன் கீழ் அதிகபட்சமாக 24 வார கருவை மட்டுமே மருத்துவ நடைமுறையின் கீழ் கலைப்பதற்கு அனுமதிக்க முடியும்.

இந்தச் சூழலில், திருமணமான 27 வயது பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ‘தனக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், உணா்ச்சி ரீதியாகவும், நிதிநிலை ரீதியிலும், மன ரீதியிலும் மூன்றாவது குழந்தையை வளா்க்கும் சூழ்நிலை இல்லை. கடுமையான மன அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளேன். எனவே, மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மனுதாரா் தனது மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, பி.வி.நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு, அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்த சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வரியா பாட்டீ, ‘கருக்கலைப்பின்போது கரு உயிருடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, கருக்கலைப்பின்போது கருவை கொலை செய்யவேண்டியிருக்கும்’ என்று மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளபோதிலும், கருக்கலைப்புக்கு அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, பெண்ணின் கருவைக் கலைப்பதை நிறுத்திவைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு உத்தரவிட்டனா்.

இதனிடையே, கருக்கலைப்பை அனுமதித்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அதே அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரரின் கருவைக் கலைக்க அனுமதிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை’ என்று நீதிபதி ஹிமா கோலி குறிப்பிட்டாா்.

ஆனால், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி நாகரத்தினா, ‘நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்னரே கருவைக் கலைக்க அனுமதித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என்றாா்.

இதன் காரணமாக, மத்திய அரசின் மனு மீதான விசாரணை வேறு அமா்வுக்கு மாற்றப்படுவதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com