என் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? - பாஜக எம்எல்ஏவின் மகள் வேதனை!

தன் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? என்று சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பீமா மாண்டவியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
தீபா மாண்டவி
தீபா மாண்டவி

தன் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? என்று சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பீமா மாண்டவியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பீமா மாண்டவி. இவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தின்போது மாவோயிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். 

பீமா மாண்டவியின் மரணத்தைத் தொடர்ந்து தண்டேவாடா தொகுதி இடைத்தேர்தலில் அவரது மனைவி ஓஜஸ்வி மாண்டவி நிறுத்தப்பட்டார். ஆனால், அவர் காங்கிரஸின் தேவதி கர்மாவிடம் தோல்வியடைந்தார். தேவதி கர்மாவின் கணவர் மகேந்திர கர்மாவும் 2013 மே மாதம் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீமா மாண்டவி
பீமா மாண்டவி

முன்னதாக காங்கிரஸின் தேவதி கர்மா, 2013 தேர்தலிலும் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பீமா மாண்டவியை தோற்கடித்தார். 2018ல் பஸ்தர் மாவட்டத்தில்  உள்ள 12 இடங்களில் காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு வருகிறது. 

அதில், தண்டேவாடா சட்டப்பேரவைத் தொகுதி, மாநில பாஜக தலைவரான சைத்ரம் அடாமிக்கு வழங்ப்பட்டுள்ளது. முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவரான அடாமி முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். 

இதற்கு எதிராகத் தான் பீமா மாண்டவியின் மகளும் கல்லூரி மாணவியுமான தீபா மாண்டவி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். 

ஓஜஸ்வி மாண்டவி
ஓஜஸ்வி மாண்டவி

நான் கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவரையும் தொண்டரையும் கேட்க விரும்புகிறேன். என் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? அவரது தியாகம் மறக்கப்பட்டுவிட்டது. என் அம்மாவுக்கு சீட் கொடுக்காமல் என் தந்தையின் தியாகத்தை ஏன் அவமதித்தீர்கள்? என் அம்மா முன்னதாக அரசியலில் தீவிரமாக இல்லை. ஆனால், தந்தை இறந்தபிறகு அரசியலில் இறங்கினார். என் தந்தையைப் போலவே, என் குடும்பத்தினர் அனைவரும் இந்த கட்சியை மதிக்கிறார்கள். என் தந்தை இந்த கட்சிக்காக தனது உயிரைக் கொடுத்தார். மேலும் எங்களது எதிர்காலம் குறித்து எதுவும் தெரியவில்லை' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

மேலும், 'தண்டேவாடா மக்கள் இன்னும் என் தந்தையை நேசிக்கிறார்கள், அவருடைய முழுமையடையாத கனவுகளையும் மக்கள் பணிகளையும் நிறைவேற்ற என் அம்மா விரும்புகிறார். பாஜக தலைவர்களிடமிருந்து எனக்கு பதில் வேண்டும்: அவர்கள் ஏன் எங்களுக்கு இப்படி செய்தார்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com