பரோடா வங்கி முகவர்களால் வாடிக்கையாளர்கள் பணம் திருட்டு? 

பரோடா வங்கியின் முகவர்களே, செல்லிடபேசி செயலி மூலம் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடியதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.
பரோடா வங்கி
பரோடா வங்கி

பரோடா வங்கியின் முகவர்களே, செல்லிடபேசி செயலி மூலம் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடியதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், பரோடா வங்கியின் டிஜிட்டல் சேவையான பிஓபி வோர்ல்ட் மொபைல் செயலியில் புதிதாக வாடிக்கையாளர்கள் சேர்வதை நிறுத்த உத்தரவிட்டதோடு, மேற்கண்ட புகார் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமார் 7,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 4.2 லட்சம் கணக்குகளில், பயனர்களின் செல்லிடபேசி எண்கள் வங்கியின் மொபைல் செயலிக்காக தவறாகப் பதிவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரோடா வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அதன் முகவர்களே பணத்தை திருடும் வகையில், தகவல்தொழில்நுட்பத்தில் குறைபாட்டுடன் இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 

அந்த தகவலில், வங்கியின் முகவர்களே, சுமார் 350 வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து இதுவரை ரூ.22 லட்சம் வரை பணத்தை திருடியிருக்கலாம் என்று அந்த வங்கியின் உள் தணிக்கை அறிக்கைகள் மூலம் தகவல்கள் கசிந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், பரோடா வங்கியின் மொபைல் செயலி சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வங்கி வாடிக்கையாளர்களின் செல்லிடபேசி எண்ணை அந்தந்த கணக்குகளுடன் இணைக்காமல், வங்கி அதிகாரிகள் தங்களது மற்றும் தங்களுக்கு தொடர்புடையவர்களின் செல்லிடபேசி எண்களை இணைத்து முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரோடா வங்கியின் மொபைல் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பல்வேறு வங்கிக் கிளையின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், வங்கி ஊழியர்களே, செல்லிடபேசி எண் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளில் தங்களது செல்லிடபேசி எண்களையே இணைத்து இவ்வாறு மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவல் மூலமாக இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com