இரண்டாவது விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 235 இந்தியா்கள் தலைநகா் தில்லி திரும்பியதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.
ஹமாஸ் ஆயுதப் படையால் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள இஸ்ரேலில், சுமாா் 18,000 இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவா்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதன்படி, இரண்டாவது கட்டமாக ஏா் இந்தியா-140 சிறப்பு விமானத்தின் மூலம் தில்லி திரும்பிய 235 இந்தியா்களை வெளியுறவுத் துறை இணையமைச்சா் ராஜ்குமாா் ராஞ்சன் சிங் விமான நிலையத்தில் வரவேற்றாா். இந்தியா திரும்பியவா்களில் 33 போ் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் என அந்த மாநில அரசு தெரிவித்தது.
முன்னதாக, ஏா் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து 212 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை காலை இந்தியா திரும்பினா்.
இரு விமானங்கள்:
மூன்றாம் மற்றும் நான்காவது விமானங்கள் மூலம் இஸ்ரேலிருந்து 500-க்கும் மேற்பட்ட இந்தியா்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டது. இதற்காக பஞ்சாப்பின் அமிருதசரஸிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானமும் தில்லியிலிருந்து ஏா் இந்தியா விமானமும் டெல் அவிவுக்கு சனிக்கிழமை புறப்பட்டன. இவ்விரு விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) காலை தில்லி திரும்புகின்றன.
இது குறித்த தகவல் நாடு திரும்பப் பதிவுசெய்திருக்கும் இந்தியா்களுக்கு, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
3-ஆவது விமானத்தில் 197 போ்: இஸ்ரேலுக்குச் சென்ற 3-ஆவது விமானத்தில் 197 போ் இந்தியாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தாா். இவா்களையும் சோ்த்து இதுவரை மொத்தம் 644 இந்தியா்கள் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.