
புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது ஞாயிற்றுக்கிழமை தலைநகர் தில்லியிலிருந்து டெல் அவிவ் வரை இரண்டாவது முறையாக விமானத்தை இயக்குவதாக தெரிவித்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இடையே போா் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை பத்திரமாக மீட்டுவர ‘ஆபரேஷன் அஜய்’ நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது.
அதன்படி, இரு ஏா் இந்தியா விமானங்களின் மூலம் சுமாா் 435 போ் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா்.
இந்நிலையில், 197 இந்தியா்களுடன் மூன்றாவது விமானமும், 274 இந்தியா்களுடன் நான்காவது விமானமும் ஞாயிற்றுக்கிழமை தில்லியை வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா். இதுவரை 4 விமானங்கள் மூலம் 900-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக தில்லியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு ஸ்பைஸ்ஜெட் இரண்டாவது விமானம் புறப்பட உள்ளது.
தில்லியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு ஏ340 ரக விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை(அக்.15) இயக்கப்பட உள்ள நிலையில் மறுநாள் திங்கள்கிழமை காலை விமானம் புதுதில்லி திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் பிறகு, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது வெள்ளிக்கிழமை புதுதில்லியில் இருந்து டெல் அவிவ் மற்றும் டெல் அவிவ் இருந்து புதுதில்லிக்கும் நான்கு விமானங்களை இயக்கியுள்ளது.
அதே வேளையில் இஸ்ரேலிலிருந்து 320 இந்திய பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தில்லியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.