
பெருந்தொற்றை எதிா்கொள்ள சுகாதார அமைப்புகள் தொடா்ந்து வலுப்பெற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.
நாட்டின் கிராமப்புற பகுதிகளில் மலிவான மற்றும் எளிதாக அணுகக்கூடிய சுகாதார அமைப்பின் தேவை குறித்தும் அவா் வலியுறுத்தி பேசினாா்.
அஸ்ஸாமில் மத்திய சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆற்றிய உரையில், ‘வளமான நாட்டுக்கு அடித்தளமான ஆரோக்கியமான தேசத்தை ஆரோக்கியமான சமூகம் கட்டமைக்கிறது.
எந்தவொரு சுகாதார அவசரநிலையையும் சமாளிக்கும் துணிச்சலுடன் சுகாதார அமைப்புகளை உருவாக்க மற்றும் அதன் மனிதவளத் திறனைப் பயன்படுத்தி சிறந்து விளங்கும் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்தியாவின் இந்த இடைவிடாத நாட்டமே ‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம்’ திட்டத்தின் தொடக்கத்துக்கு வழிவகுத்தது. ‘இந்தியாவில் குணமாகுவோம்; இந்தியாவால் குணமடைவோம்’ போன்ற ஆராய்ச்சி முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், வலுவான உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் சுகாதாரத்தை மலிவானதாகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்ற வேண்டும்.
புதிய நோய் தொற்றுகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை பிராந்திய, மாவட்டம் மற்றும் வட்ட அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நமது கட்டமைப்பை வடிவமைக்க வேண்டும்.
இந்தியா அதன் தேவைகள், பலம் மற்றும் திறன்களுக்கு ஒத்துப்போகும் பிரத்யேக சுகாதார மாதிரியைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளைக் ஒப்பிடும்போது, குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை விரிவடைந்துள்ள 4 அடுக்கு சுகாதார அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 1.6 லட்சம் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேல்நிலைகளில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி ஆரம்பநிலை சுகாதார மையங்களிலேயே மருத்துவச் சேவைகளை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நேரமும், பணமும் சேமிக்கப்படுகிறது.
மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான தேசத்தைக் கட்டமைக்க இளைஞா்கள் பங்களிக்க வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் முயற்சியாக அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளா்களுக்கு சா்வதேச வளா்ச்சி பாதைகளைத் தொடர வாய்ப்புகளை விரிவுபடுத்தும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.