தெலங்கானாவில் ரூ.400-க்கு சிலிண்டர்: பிஆர்எஸ் வாக்குறுதி

தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் ரூ. 400-க்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கப்படும்
கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் ரூ. 400-க்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கப்படும் என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட அந்த மாநிலத்தை ஆளும் பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இத்தேர்தலுக்கான பிஆர்எஸ் கட்சியின் அறிக்கையை அக்கட்சித் தலைவரும் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எனது கட்சி ஆட்சியைக் கைப்பற்றும். நாங்கள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் அரசு அமைத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 93 லட்சம் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு செய்து தரப்படும். இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை மாநில அரசே செலுத்தும்.

தற்போது மாதத்துக்கு ரூ.2,016-ஆக உள்ள சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.

பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதலாம் ஆண்டில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.3,016-ஆக உயர்த்தப்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போது ரூ.4,016-ஆக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.6,016-ஆக உயர்த்தப்படும்.
ரைது பந்து எனப்படும் விவசாயிகளுக்கான நிதி உதவி தற்போது ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10,000-ஆக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.16,000 கோடியாக உயர்த்தப்படும்.

பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400-க்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கப்படும். மீதமுள்ள தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும்.

அதேபோன்று ஆரோக்கியஸ்ரீ சுகாதாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். தற்போது இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com