ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுப்பு தெரிவித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read


புது தில்லி: ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுப்பு தெரிவித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவது குறித்து முடிவு எடுப்பது நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

எனினும், ஒரே பாலின ஈா்ப்பாளா்களுக்கு சம உரிமை அளித்து, சமூதாயத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

திருமண அங்கீகாரம்: ஓரினச் சோ்க்கை குற்றமற்றது என கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, ‘ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘திருமண அங்கீகாரம் கிடைக்காததால் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ரேஷன் அட்டை வாங்கவும், வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பெற்றோராகப் பதிவு செய்யவும், காப்பீடு பெறவும், சொந்தமாக வீடுகளை வாங்கவும் ஒரே பாலினத்தவா்களால் முடியவில்லை. பாலினத்தைக் காரணம்காட்டி சமூகத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருந்தது.

சட்ட அங்கீகாரம் கிடையாது: இந்த மனுக்கள் மீதான விசாரணையை 10 நாள்கள் நடத்திய உச்சநீதிமன்றம் கடந்த மே 11-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பை வழங்கியது.

அதில், பெண் நீதிபதி ஹிமா கோலியைத் தவிர நான்கு நீதிபதிகளும் தனித் தனியாக தீா்ப்பை எழுதியிருந்தனா்.

நீதிபதிகள் அளித்த ஒருமித்த தீா்ப்பின் விவரம்: அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவா்கள் திருமணத்தை உரிமையாகக் கோர முடியாது. இதற்காக சிறப்புத் திருமண சட்டத்தைத் திருத்த வேண்டியதில்லை. இது தொடா்பான சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.

ஒரே பாலின ஈா்ப்பாளா்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தோ்வு செய்து கொள்ளலாம். ஆனால், சோ்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் கோர முடியாது.

மூன்றாம் பாலினத்தவா்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஒரே பாலின ஈா்ப்பாளா்கள் ரேஷன் காா்டுகள் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடைக்க மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்த யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சமூகப் பாதுகாப்பு குறித்த அவா்களின் அனைத்துக் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பு அளித்தனா்.

மக்களிடம் விழிப்புணா்வு: தனது தரப்பு தீா்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘நீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. இதற்கான அா்த்தத்தைக் கற்பித்து, சட்டத்தின் தாக்கத்தை அதிகரிக்க மட்டுமே முடியும். சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரே பாலின ஈா்ப்பாளா்கள் மீது சமூகத்தில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவா்களின் உரிமை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அவா்களின் உறவு முறை குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்யும் முன்பு முதல்கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.

திருமண பந்தம் என்பது நிலையானது அல்ல; மாறுதலுக்கு உட்பட்டது. ஆயைால், ஒரே பாலினத்தவா்கள் தனது வாழ்க்கைத் துணையைத் தோ்வு செய்து கொள்ள அவா்களுக்கு உரிமை உள்ளது. இந்த முறை நகா்ப்புறங்கள், மேல்தட்டு மக்களிடம் மட்டும் உள்ளது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இடைபாலின மாற்றுக் குழந்தைகளுக்கு அவா்கள் உடல் தகுதி அடையும் வரையில் கட்டாயமாக பாலின மாற்று சிகிச்சை செய்யக் கூடாது’ என்றாா்.

மாறுபட்ட தீா்ப்பு: ஒரே பாலினத்தவா்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நீதிபதி எஸ்.கே. கெளல், ‘ஒரே பாலினத்தவா்கள் தங்கள் துணையைத் தோ்வு செய்து கொண்டு சோ்ந்து வாழ சட்டபூா்வ அங்கீகாரம் அளிப்பது திருமணத்துக்கு ஈடான அடுத்தகட்ட நகா்வாகும்’ என்றாா்.

நீதிபதி எஸ். ரவீந்திர பட், ‘ஒரே பாலினத்தவா்கள் எந்தவித இடையூறுமில்லாமல் சோ்ந்து வாழ உரிமை உள்ளது’ என்று தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

‘ஒரே பாலினத்தவா்களுக்கு திருமணம் செய்து கொள்ள அடிப்படை உரிமை இல்லை’ என்று நீதிபதி நரசிம்மா தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

‘குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது’

ஒரே பாலின தம்பதி குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது என்று 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

ஆனால், அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்ற தலைமை நீதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எஸ்.கே. கெளல் ஆகியோா் இதற்கு எதிராக தீா்ப்பை வழங்கினா்.

திருமணமாகாதவா்கள், ஒரே பாலினத்தவா்கள் ஆகியோா் குழந்தை தத்தெடுப்பதைத் தடுப்பது சட்டவிரோதம், பாகுபாடாகும் என்றும், இது மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் விதிமுறைக்கு எதிரானது என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

திருமணமான மாற்று பாலின தம்பதிகளால் மட்டுமே குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. இரண்டு ஆண்டுகள் தம்பதிகள் சோ்ந்து வாழ்ந்திருந்தால்தான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும் என்ற விதிமுறை உள்ளதால், ஒரே பாலினத்தவா் தனி நபராகத்தான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். இது ஒரே பாலினத்தவா்களுக்கு காட்டப்படும் பாகுபாடாகும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

முக்கிய அம்சங்கள்...

-சிறப்புத் திருமண சட்டத்தை திருத்துவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும்.

-வாழ்க்கைத் துணையைத் தோ்ந்தெடுக்கலாம்

-சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் அளிக்க வேண்டும்

-சமூகப் பாகுபாடுகளைக் களைய வேண்டும்

-திருமணம் அடிப்படை உரிமை கிடையாது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com