ககன்யான் சோதனைக் கலனிலிருந்து எடுத்த விடியோவை வெளியிட்டது இஸ்ரோ! 

ககன்யான் சோதனைக் கலனிலிருந்து எடுத்த விடியோவை பகிர்ந்துள்ளது இஸ்ரோ.
ககன்யான் சோதனைக் கலனிலிருந்து எடுத்த விடியோவை வெளியிட்டது இஸ்ரோ! 

புது தில்லி: மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிலையில் ககன்யான் சோதனைக் கலனிலிருந்து எடுத்த விடியோவை பகிர்ந்துள்ளது இஸ்ரோ.

ககன்யான் திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை 2025-ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக மூன்றுகட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை மாறுபாடு காரணமாக காலை 8.30 மற்றும் காலை 8.45 மணிக்கு என இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 8.45 மணிக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விண்ணில் ஏவத் தயாராக இருந்த விண்கலம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி 5 நொடிகளில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 10 மணிக்கு வெற்றிகரமாக சோதனை விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதில், மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனானது டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையிலிருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பப்பட்டது. பின்னா், அங்கிருந்து மாதிரி கலன் தனியாகப் பிரிந்து பாராசூட்டுகள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது.

கடலில் விழுந்த கலனை அங்கு தயாா் நிலையில் இருந்த இந்திய கடற்படையின் சிறப்புக் கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் பாதுகாப்பாக மீட்டனா்.

இந்த நிலையில், ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த விடியோவை இஸ்ரோ, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதில், ஆன்போர்டு கேமராவால் பிடிக்கப்பட்ட விடியோ, என்ஜின் பற்றவைப்பு, குழு தொகுதி பிரிப்பு, உச்ச கவர் பிரிப்பு மற்றும் முக்கிய சரிவு வரிசைப்படுத்தல் ஆகியவற்றின் தருணங்களைக் காட்டப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com