நாட்டில் அதிகம் திருடுபோகும் கார் வகைகள்

கார் வாங்குவதை விட, அது சேதமடையாமல் பாதுகாப்பதும், பாதுகாப்பாக நிறுத்துமிடத்தில் வைப்பதும் கொடுங்கனவாக இருக்கிறது.
நாட்டில் அதிகம் திருடுபோகும் கார் வகைகள்


நடுத்தர மக்களுக்கு எவ்வாறு வீடு வாங்குவது மிகப்பெரிய கனவோ அதுபோலவே கார் வாங்குவது என்பதும் ஒரு கனவுதான். 

ஆனால், கார் வாங்குவதை விட, அது சேதமடையாமல் பாதுகாப்பதும், பாதுகாப்பாக நிறுத்துமிடத்தில் வைப்பதும் கொடுங்கனவாக இருக்கிறது.

இந்த நிலையில்தான், நாட்டில் ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கார்கள் திருடுபோவதாகவும், அதிகபட்சமாக புது தில்லியில் அதிக கார்கள் திருடுபோவதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், திருடப்படும் கார்களில் ஒரு சில கார்கள் முன்னணியில் இருக்கிறதாம்.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
இந்தியாவில் திருடுபோகும் கார்களில் முன்னணியில் இருப்பது மாருதி சுசூகி ஸ்விஃப்ட் வகைதானாம். கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் உள்ளது. இதிலிருக்கும் பல நவீன வசதிகளால்தான் அதிகம் வாங்கப்படுவது போல, அதிகம் திருட்டும்போகிறது போல.  இதற்காகவா இந்தக் காரை திருடுகிறார்கள் என்றால் இல்லையாம். இந்தக் காரின் மறுவிற்பனை விலை அதிகம் என்பதுவே.

மாருதி சுசூகி வேகன்ஆர்
இரண்டாம் இடத்தில் இந்த கார் இருக்கிறதாம். குடும்பத்தினர் பயணிக்க கார் வாங்குவோரின் சிறந்த தேர்வாக இது இருக்குமாம். இரண்டு எஞ்ஜின் ஆப்ஷனோடு வருவதால் இதற்கு அதிக தேவை இருக்கிறதாம் சந்தையில்.

கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இதன் விலை இருக்கும் நிலையில், திருடர்களுக்கும் இதன் மீது ஒரு கண் இருப்பதால், இந்தக் காரை வைத்திருப்பவர்களும் இதனை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டியது அவசியமாகிறதாம்.

ஹூண்டாய் க்ரெட்டா
எஸ்யூவி கார்களில் அதிகம் விற்பனையாகும் மாடலாக இந்த ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது போல அதிகம் திருடப்படும் கார்களிலும் இது முன்னணியில் இருப்பதுதான் வேதனை.

இந்த க்ரெட்டா வகை கார்கள் மறுவிற்பனைக்காக திருடப்படுவதில்லையாம். இதன் உதிரிபாகங்களுக்காகவே திருடப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் விலை ரூ.11 லட்சத்திலிருந்து தொடங்குகிறதாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ
ஹூண்டாய் கார் வகைகளில் அதிகம் திருடப்படும் காராக இது உள்ளது. நடுத்தர மக்களால் வாங்கும் விலையில், அளவிலும் கச்சிதமான கார் மாடலாக இது விளங்குகிறது. ஆனால், விற்பனையில் களைகட்டாததால், இதன் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தக் காரின் உதிரிப் பாகங்கள் கிடைக்காததால், அதன் விலை அதிகம் என்றும், இதனை நன்கு அறிந்துகொண்ட கார் திருடர்கள் உதிரிப் பாகங்களை விற்பதற்காகவே இந்த வகைக் காரை அதிகம் திருடுவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் விற்பனையாகி, சாலைகளில் அதிகம் செல்லும் வாகனங்களை திருடும்போது திருடர்களைப் பிடிப்பதில் காவல்துறைக்கு சற்று சவாலாக இருக்கும். இதனால், அதிகம் விற்பனையாகும் மாடல்களை திருடர்களும் திருடுகிறார்கள், அதனை விற்பனை செய்வதும் எளிதாக இருக்கும் என்றும் காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com