சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்: 53 நாள்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுவிப்பு

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக உயா்நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரவரம் சிறையிலிருந்து வெளியே வந்த முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரவரம் சிறையிலிருந்து வெளியே வந்த முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக உயா்நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, 53 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து அவா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்ாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனா். நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்குரைஞா்கள் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை அவா் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

அதேபோல், ஜாமீன் காலம் முடிந்து ராஜமகேந்திரவரம் சிறைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் வரும் 28-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு ஆஜராக வேண்டும். ஆஜராகும் நாளில் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்கள் அடங்கிய கோப்புகளை சிறைக் கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் வழக்கமான ஜாமீன் மனு 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொண்டா்கள் உற்சாக வரவேற்பு: உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து, 53 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 4.20 மணியளவில் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளியே வந்தாா். சிறை வளாகத்தில் கூடியிருந்த அவரது குடும்பத்தினா், கட்சித் தொண்டா்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனா்.

ஹிந்த்பூா் எம்எல்ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சி மாநிலத் தலைவா் கே. அச்சன் நாயுடு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் அவரை வரவேற்க சிறை வளாகத்துக்கு வந்திருந்தனா்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், குண்டூா் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சந்திரபாபு நாயுடு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com