எதிர்க்கட்சியினர் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா? மத்திய அமைச்சர் விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி,  மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர், ராகுல் சத்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் ஆப்பிள் செல்போன்களுக்கு இன்று அதிகாலை எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில்,  'உங்கள் கைபேசி மீது தாக்குதல் நடக்கலாம், அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், “செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் குறுஞ்செய்தி குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஸ்வினி வைஸ்ணவ் பேசியது:

“ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி அல்லது இ-மெயிலில் எந்த தெளிவான தகவலும் இல்லை. மதிப்பீட்டின் அடிப்படையில் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளனர். அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டு உண்மையல்ல என ஆப்பிள் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. 150 நாடுகளுக்கு உள்ள மக்களுக்கு இதுபோன்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை பார்க்க முடியாமல் சிலர் அழிவிற்கான அரசியலை செய்கிறார்கள்.

மத்திய அரசை விமர்சிப்பவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லாத போதெல்லாம், ஒட்டுக்கேட்பு விஷயத்தை முன்வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த இதுபோன்ற குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குற்றச்சாட்டு எதுவும் உறுதி செய்யப்படவில்லை. பிரியங்கா காந்தியும், அவரது இரண்டு குழந்தைகளின் செல்போன்களும் ஒட்டுக்கேட்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால், எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை குறுஞ்செய்திகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சியினர், காலைமுதல் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com