சந்திரயான் 3: லேண்டரை மீண்டும் மேலே எழுப்பிய சோதனை வெற்றி!

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் மீண்டும் பாதுகாப்பாக இஸ்ரோ தரையிறக்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் மீண்டும் பாதுகாப்பாக இஸ்ரோ தரையிறக்கியது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா், ஆக. 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. மேலும், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவின் மீது தரையிறங்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது.

பிரக்யான் ரோவா் கலனில் ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே நிறமாலைமானி (ஏ.பி.எக்ஸ்.எஸ்.), லேசா் ஒளிக்கற்றையால் தூண்டப்பட்ட முறிவு நிறமாலைமானி (எல்.ஐ.பி.எஸ்.) ஆகிய 2 அறிவியல் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

விக்ரம் லேண்டா் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீ. சுற்றளவில் வலம் வரத் திட்டமிட்டுள்ள பிரக்யான் ரோவா், நிலவில் மண், கற்கள், தன்மை, தனிமங்கள், வேதிக்கலவை போன்றவற்றை ஆய்வுக்கு உள்படுத்தி வருகிறது.

பிரக்யான் ரோவா் 100 மீ. தொலைவுக்கு தனது பயணத்தை மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்தது. மேலும், பிரக்யான் ரோவா் பயணித்த தடத்தை சுட்டிக்காட்டும் படத்தையும் இஸ்ரோ வெளியிட்டது.

இந்த நிலையில், சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் மீண்டும் பாதுகாப்பாக இஸ்ரோ தரையிறக்கியது.

மேலும், நிலவின் தென் பகுதியில் உள்ள லேண்டரின் அனைத்து கருவிகளும் சரியாக உள்ளன என்றும், இந்த செயல்பாடு வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com