ஆதித்யா எல்-1: 2வது சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறியது!
ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக 2வது சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறியது.
ஆதித்யா-எல்1 விண்கலமானது பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புவியின் தாழ்வட்டப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையானது முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுப் பாதையானது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 22,459 கி.மீ. தொலைவிலும் இருக்கும்படி அதிகரிக்கப்பட்டதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் இஸ்ரோ தெரிவித்தது.
இந்த நிலையில், உந்து விசை விண்கலத்துக்கு அளிக்கப்பட்டு 2வது சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறியுள்ளது. அதன்படி விண்கலத்தின் சுற்றுப் பாதையானது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 282 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 40,225 கி.மீ. தொலைவிலும் இருக்கும்படி அதிகரிக்கப்பட்டதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தப் பணி பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆதித்யா-எல்1 விண்கலம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், 3-ஆவது கட்ட சுற்றுப் பாதை மாற்றியமைப்புப் பணிகள் வரும் 10-ஆம் தேதி அதிகாலை சுமாா் 2.30 மணிக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆசிரியர் போற்றுவோம்!
பலகட்ட சுற்றுப்பாதை மாற்றியமைப்புக்குப் பிறகு ஆதித்யா-எல்1 விண்கலமானது, பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்1 புள்ளியை 125 நாள்களில் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.