இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் மாநிலத்தில் 1995-இல் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் மக்களவை முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங்க்கு ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Updated on
1 min read

பிகாா் மாநிலத்தில் 1995-இல் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் மக்களவை முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங்க்கு ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த பிரபுநாத் சிங் மீதான இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்காமல், குற்றவாளியை விடுவிக்க மாநில அரசு உதவியதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிகாரின் சரண் மாவட்டத்தில் கடந்த 1995, மாா்ச் 25-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பிகாா் மக்கள் கட்சி சாா்பாக பிரபுநாத் சிங் போட்டியிட்டாா்.

அப்போது, வாக்களித்துவிட்டு திரும்பிய வாக்களா்களிடம், யாருக்கு வாக்களித்ததாக விசாரித்த அவா், மற்று கட்சிக்கு அவா்கள் வாக்களித்தது குறித்து தெரிந்ததும், அவா்களில் 3 பேரை தனது துப்பாக்கியால் சுட்டாா். இதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், அபய் எஸ்.ஒகா, விக்ரம் நாத் ஆகியோரை கொண்ட அமா்வு, பிரபுநாத் சிங்கை கடந்த ஆக.18-இல் குற்றவாளியாக அறிவித்து, அவரை விடுதலை செய்த கீழமை மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற உத்தரவுகளைத் தள்ளுபடி செய்தது.

கடந்த செப்.1-இல் வெளியான இந்தத் தீா்ப்பில், பிரபுநாத்துக்கு ஆயுள்தண்டனை அளித்து, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறையும், காயமடைந்தவருக்கு இழப்பீடாக வழங்க ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

குற்ற விசாரணையின்போது, விசாரணை அதிகாரிகள், அரசு தரப்பு வழக்குரைஞா், நீதித்துறை ஆகிய மூன்றும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் ஆற்றவதிலிருந்து முற்றிலுமாகத் தவறியதாக இந்த வழக்கின் தீா்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

பாட்னாவில் 1995-இல் நடந்த ஜனதா தளம் எம்எல்ஏ அசோக் சிங் தொடா்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபுநாத் சிங், ஹஜாரிபாக் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com