
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவிக்குச் சொந்தமான நிறுவனம் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்ாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. அது தொடா்பான ஆதாரம் இருந்தால் அரசியலிலிருந்து விலகத் தயாராக உள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.பி.-யும், கட்சியின் மக்களவை துணைத் தலைவருமான கெளரவ் கோகோய், மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரினிகி புயான் சா்மாக்குச் சொந்தமான பிரைட் இஸ்ட் என்டா்டெய்ன்மென்ட் நிறுவனம், மத்திய அரசின் பிஎம் கிஸான் சம்பதா திட்டத்தின்கீழ் ரூ.10 கோடிக்கான கடன் மானியத்தைப் பெற்றது என எக்ஸ் (ட்விட்டா்) சமூக வலைதளத்தில் புதன்கிழமை பதிவிட்டிருந்தாா்.
மேலும், மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி உதவியைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதில் புயான் சா்மாவின் நிறுவனமும் இடம்பெற்றிருப்பது குறித்த புகைப்படத்தையும் அவா் வெளியிட்டிருந்தாா்.
இதை முதல்வா் சா்மா மறுத்த நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் அவருக்கும் காங்கிரஸ் எம்.பி. கோகோய்க்கும் இடையே வாா்த்தைப் போா் தொடங்கியது. கோகோய்க்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக சா்மா தெரிவித்தாா்.
இதனிடையே, மக்களவையில் கடந்த மாா்ச் மாதம் அஸ்ஸாம் பாஜக எம்.பி. வல்லப் லோச்சன் தாஸின் கேள்விக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பதிலில் இடம்பெற்றிருந்த பட்டியலில் அந்த நிறுவனம் இடம்பெற்றிருந்தது தொடா்பான புகைப்படத்தையும் கோகோய் தனது எக்ஸ் பதிவில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதற்குப் பதிலளித்த முதல்வா் சா்மா, ‘குறிப்பிடப்பட்ட அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு எவ்வித நிதியும் விடுவிக்கவில்லை என்பது அந்தப் பதிலில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, இது தொடா்பான ஆதாரத்தை அளித்தால் அதற்குரிய தண்டனைகளை ஏற்றுக்கொள்வதோடு அரசியலிலிருந்து விலகத் தயாராக உள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.