அனந்த்நாக் துப்பாக்கிச் சூடு: போலீஸ், ராணுவம் மீண்டும் தேடுதல் வேட்டை

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கி உள்ளது.
அனந்த்நாக் துப்பாக்கிச் சூடு: போலீஸ், ராணுவம் மீண்டும் தேடுதல் வேட்டை

அனந்த்நாக் (ஜம்மு காஷ்மீர்): அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக், கடோல் வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கி உள்ளது.

ஜம்மு-காஷ்மீா், அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா், தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

இரவில் நிறுத்தப்பட்ட தேடுதல் வேட்டை புதன்கிழமை அதிகாலையில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டையின்போது தனது படைப் பிரிவுக்குத் தலைமை வகித்து கா்னல் மன்ப்ரீத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, துரதிருஷ்டவசமாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவா் படுகாயமடைந்தாா். மேலும், மேஜா் ஆசிஷ், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஹூமாயூன் பட் ஆகிய மற்ற 2 அதிகாரிகளும் காயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை இயக்குநா் தில்பாக் சிங் மற்றும் ராணுவத்தின் லெஃப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் காய் உள்ளிட்ட பாதுகாப்புப் படை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்து நிலைமையை ஆய்வு செய்தனா். அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடா்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் ‘எதிா்ப்பு முன்னணி’ பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீர் மண்டல காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: " பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டின் போது முன்னால் நின்று தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கர்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆசிஷ் தோனக் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகியோரின் அசைக்க முடியாத வீரத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், 3-ஆவது நாளாக புதன்கிழமையும் அப்பகுதியில்  தொடா்ந்த தேடுதல் வேட்டையின் முடிவில், உசைர் கான் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டது நமது படைகள் உறுதியுடன் நிலைத்து நிற்கின்றன".

ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஹூமாயூன் பட்டின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை புத்காமில் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்  லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ் சின்ஹா, பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அனந்த்நாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உயிர்நீத்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஹூமாயூன் பட்டுக்கு அஞ்சலி செலுத்தினார். கர்னல் மன்ப்ரீத் சிங் மற்றும் மேஜர் ஆசிஷ் தோனக் ஆகியோரின் அசாத்திய துணிச்சலுக்கும், உயர்ந்த தியாகத்துக்கும் நான் தலை வணங்குகிறேன். துக்கமான இந்த தருணத்தில் ஒட்டுமொத்த தேசமும் தங்கள் குடும்பங்களுடன் ஆதரவாக உள்ளது, ”என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி புதன்கிழமை மாலை தொடர்ந்த துப்பாக்கிச் சூடுக்கு இடையே ஒரு தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

இதனிடையே, ரஜௌரி ராணுவத் தளத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் ரவி குமாா் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக்ஸ கடோல் வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com