கேரளத்தில் பரவும் நிபா: மருத்துவமனை ஊழியருக்கும் பாதிப்பு

தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் பரவும் நிபா: மருத்துவமனை ஊழியருக்கும் பாதிப்பு


கோழிக்கோடு: கேரளத்தில் இறந்த இரண்டு பேர் உள்பட நான்கு பேருக்கு நிபா தீநுண்மியானது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதாகும் மருத்துவமனை ஊழியரின் மாதிரிகள் புணேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதனால், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தற்போது நிபா வைரஸ் பாதித்து சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்றாக  அதிகரித்துள்ளது. 

தற்போது, மேலும் மூன்று பேரின் மருத்துவ அறிக்கைக்காக சுகாதாரத் துறையினர் காத்திருக்கிறார்கள்.

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடா்புலிருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புணேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கேரள பேரவையில் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘மாநிலத்தில் பரவும் நிபா தீநுண்மியானது (வைரஸ்) அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்ஐவி) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையிலிருந்து கேரளத்துக்கு வந்து தொற்று பாதிப்பு தொடா்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புணே என்ஐவி குழு வருகின்றனா்.

கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆயஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், கூற்றியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபா தொற்றால் பலியானவா்கள் தொற்று அறிகுறி தென்பட்டதிலிருந்து இறக்கும் வரை சென்ற அனைத்து இடங்களின் வழித்தடத்தை மாநில சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

கோழிக்கோட்டில் இரு சுகாதாரப் பணியாளா்களுக்கு நிபா தொற்று அறிகுறி உள்ளது தெரியவந்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தையடுத்த மலப்புரம் மாவட்டத்திலும் நிபா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவா் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com