சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.4-க்கு ஒத்திவைப்பு!

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூத்த தலைவா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு அக்.4-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.4-க்கு ஒத்திவைப்பு!

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் இடைக்கால ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிசோடியாவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, இந்த விவகாரம் தொடர்பாக வாதிட இரண்டு முதல் மன்று மணி நேரம் அவகாசம் தேவை என்று கூறியதையடுத்து, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. 

தில்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த சிசோடியா, ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் நிகழாண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா் காவலில் வைக்கப்பட்ட அவா், பிப்ரவரி 28 -ஆம் தேதி தில்லி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், மாா்ச் 9-ஆம் தேதி இந்த விவகாரத்தில் பணமோசடி தொடா்புடைய வழக்கில் திகாா் சிறையில் நடத்திய விசாரணைக்குப் பிறகு சிசோடியாவை அமலாக்கத் துறை கைது செய்தது.

முன்னதாக, தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே ‘மிகவும் தீவிரமிக்கவை’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com