2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு?

    
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்த பிறகு 2029ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற முதல் அமர்விலேயே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்று (செப்.19) தாக்கல் செய்யப்பட்டது. 

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். 

மகளிருக்கான இடஒதுக்கீட்டில் 3-ல் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள சட்டப்பேரவைகளில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் சட்டப்பேரவைகள் ஒப்புதல் அளித்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும். 

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின், தொகுதி மறுவரையறை செய்த பிறகு இந்த மசோதா அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்ட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

2002 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசியலமைப்பின் 82 வது பிரிவின்படி, 2026ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். இதனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு நடத்தப்படலாம். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு மக்களவைத் தொகுதி வரையறை செய்யப்படும். உடனடி மறுவரையறைக்கு தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகி 15 ஆண்டுகளுக்கு (மக்களவையின் 3 பதவிக்காலங்கள்) அமலில் இருக்கும், ஆனால் அதன் காலம் நீட்டிக்கப்படலாம். 

முக்கியமாக, ஒவ்வொரு முறை தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் 14 சதவிகித பெண்கள் மட்டுமே உள்ளனர். மக்கள்தொகையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com