உட்கார்.. உதை வாங்கப் போற..: மக்களவையில் ஆவேசமான தயாநிதிமாறன்

மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய அமைச்சரை உட்கார்.. உதை வாங்கப் போற.. நீ அமைச்சர் தானே என்று தயாநிதி மாறன் ஆவேசமடைந்தார்.
மக்களவையில்..
மக்களவையில்..

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது, மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய அமைச்சரை உட்கார்.. உதை வாங்கப் போற.. என்று தயாநிதி மாறன் ஆவேசமடைந்தார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை காலை, சந்திரயான் வெற்றி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். எம்.பி. சசி தரூரைத் தொடர்ந்து. திமுக உறுப்பினர் ஆ. ராசா பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அப்போது மக்களவையில், சசி தரூர் உள்ளிட்டோர் பேசிய பேச்சு குறித்து உறுப்பினர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.

திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா பேசத் தொடங்கினார். தன்னை மக்களவையில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு பேச்சைத் தொடங்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோஷம் எழுப்பினர்.

அப்போது, ஆ. ராசாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கோஷமெழுப்பியவர்களைப் பார்த்து, நீ உதை வாங்கப்போற.. உட்கார், உட்கார்.. அவ்ளோதான்.. என்ன? என்ன? என்ன பேசுற? என்று ஆவேசமடைந்தார்.

தொடர்ந்து கோஷம் எழுந்தநிலையிலும், ஆ. ராசாவை அவைத்தலைவர்  ராஜேந்திர அகர்வால் பேசுமாறுக் கூறினார். இவ்வளவு அமளிக்கிடையே எவ்வாறு பேசுவது என்று ஆ. ராசா கேள்வி எழுப்பினார். கோஷம் எழுப்பியவர்களிடம், உங்களுக்கு என்னதான் வேண்டும். உட்காருங்கள் என்று அவைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, ஆ. ராசாவையும் பேசுமாறு வலியுறுத்தினார். 

கோஷம் அதிகமான நிலையில், என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே என்றும் குரல் ஒலித்தது. ஓரளவுக்கு, அவை அமைதியான பிறகு, ஆ. ராசா பேசினார். உடல்நிலை குறிப்பாக தொண்டை சரியில்லாததால் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இங்கே பேச வேண்டியது அவசியம் என்று கருதியதால் பேசுகிறேன். சந்திரயான் -3 வெற்றிக்கு, முழுக்க முழுக்க விஞ்ஞானிகளின் தன்னலமற்ற உழைப்பு காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். இன்று அவையில் பேசுகையில், இந்த அரசுக்கும், விண்கலம் வெற்றி பெற திட்டத்தை செயல்படுத்த உதவிய மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஏ. ராசா கூறினார்.

பிறகு, சந்திரயான்-3 விண்கலம் வெற்றி குறித்து ஆ. ராசா தொடர்ந்து  பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com