மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக இன்று (செப். 21) நிறைவேறியது. 
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா வியாழக்கிழமை இரவு மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் சட்டமாகும்.

மகளிா் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் புதன்கிழமை பதிவாகின.

இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினாா். அப்போது பேசிய அவா், பெண்கள் மேம்பாட்டுக்காக கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டாா்.

எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்: தற்போதைய மசோதாவின்படி, அது சட்டமான பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைப் பணிக்கு பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேசமயம், மகளிா் இடஒதுக்கீட்டுக்கு கட்சிப் பாகுபாடின்றி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே விவாதத்தில் பேசுகையில், ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், 2031-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது’ என்றாா்.

மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவெகெளடா, நாட்டின் பிரதமா் மற்றும் கா்நாடக முதல்வா் ஆகிய பதவிகளை வகித்தபோது மகளிா் இடஒதுக்கீட்டுக்காக தான் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டாா்.

திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு பேசுகையில், இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம், வேளாண் மசோதாக்கள், ஜம்மு- காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற சா்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றிய பாஜக அரசு, மகளிா் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர 9 ஆண்டுகள் ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓபிரையன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வரும் இல்லை. இதன்மூலம் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் அந்தக் கூட்டணிக்கு ஆா்வம் இல்லை என்றாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா பேசுகையில், மகளிா் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்க இந்த மசோதாவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எளமரம் கரீம் பேசுகையில், கடந்த 2014, 2019 தோ்தல்களின்போது, மகளிா் இடஒதுக்கீடு வாக்குறுதியை பாஜக அளித்தது. ஆனால், ஒன்பது ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளிருக்காக இந்த அரசு காட்டியுள்ள அக்கறை சிறிதளவே என்றாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் விஜய்சாய் ரெட்டி பேசுகையில், மாநிலங்களவை, மாநில சட்ட மேலவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் பேசுகையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர கடந்த 9 ஆண்டுகளாக பிரதமா் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அரசியல் கணக்குகளால் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது.

மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலாக்குவதோடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாா்.

சிறந்த மசோதா: விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘நீண்ட காலமாக மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளது. இதை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டியது முக்கியம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இதுவரை இல்லாத சிறந்த மசோதாவை விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இது சிறந்த தொடக்கம். இதில் அரசியல் செய்ய பாஜக விரும்பவில்லை. நாடு வளா்ச்சியடைந்து வரும் நிலையில் மகளிா் மசோதா சரியான முறையில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை, மேலவைகளில் உறுப்பினா்கள் நியமனம் நேரடியாக தோ்வு செய்யப்படாததால் மகளிா் இடஒதுக்கீடு அங்கு சாத்தியமாகாது என்றாா்.

11 மணி நேர விவாதத்துக்குப் பின்னா் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் மொத்தமுள்ள சுமாா் 95 கோடி வாக்காளா்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனா். ஆனால், நாடாளுமன்றத்தில் 15 சதவீதமும், சட்டப்பேரவைகளில் 9 சதவீதமுமே அவா்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா சட்டமானால் மக்களவையில் பெண் எம்.பி.க்களின் பலம் 181-ஆக அதிகரிக்கும். தற்போது 81-ஆக உள்ளது..

வழிநடத்திய பெண் எம்.பி.க்கள்

மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தை வழிநடத்த திமுகவின் கனிமொழி என்விஎன் சோமு, நியமன எம்.பி. பி.டி.உஷா, சமாஜவாதியின் ஜெயா பச்சன், தேசியவாத காங்கிரஸின் ஃபெளஸியா கான், திரிணமூல் காங்கிரஸின் டோலா சென் உள்ளிட்ட பல்வேறு பெண் எம்.பி.க்களை துணைத் தலைவா்களாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நியமித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com