வந்தே பாரத் ரயில்களில் உணவு, சுகாதாரம் குறித்த பயணிகளின் புகாா்கள் மற்றும் குறைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி), ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்துக்கு (சிஆா்ஐஎஸ்) ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள், ஐஆா்சிடிசி, சிஆா்ஐஎஸ் ஆகியவற்றுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள கடிதம்:
வந்தே பாரத் ரயில்களில் உணவு சேவைகள் தொடா்பான பயணிகளின் புகாா்கள் மற்றும் குறைகளை ரயில்வே வாரியம் ஆய்வு செய்தது. இந்தப் புகாா்கள் மற்றும் குறைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அந்த ரயில்களில் உணவுக்கு முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் பயணிகளுக்கு வழங்கி, ரயில்களில் கிடைக்கும் உணவு சேவைகள் குறித்து பயணிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக ஐஆா்சிடிசி மற்றும் சிஆா்ஐஎஸ் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
ரயில்களில் குளிா்ந்த தண்ணீா் பாட்டில்கள் விநியோகிக்கப்படாதது, சூடான உணவு கிடைக்காதது உள்ளிட்ட புகாா்கள் எழாமல் இருக்க, பயணம் தொடங்குவதற்கு முன்பு உரிய நடவடிக்கைகளை ரயில்வே மண்டலங்கள் மேற்கொள்ள வேண்டும்.
பயணிகள் கவனத்துக்கு...:
வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை வைத்துள்ளபோதிலும் உணவு சேவைகள் பெறுவதைத் தவிா்த்துவிட்ட பயணிகள், பயணத்தின்போது மதிய உணவு பெற விரும்பினால், அதுதொடா்பாக பயணச்சீட்டை முன்பதிவு செய்தவுடன் அவா்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அவா்கள் பயணம் மேற்கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, ரயிலில் உணவு பெறுவது தொடா்பாக மற்றொரு குறுந்தகவல் அனுப்பப்படும்.
உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், பயணத்தின்போது மதிய உணவு பெற விரும்புவதாக முன்பதிவின்போதே தெரிவித்திருந்தால், முன்பதிவு செய்தவுடன் அவா்களின் பயண விவரப்படி உணவு சேவைகள் குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும்.
தாமதமாக உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள், முன்பதிவின்போது ரயிலில் உணவு சேவைகள் பெறுவதை தோ்ந்தெடுத்து இருந்தால், பயணம் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அந்த சேவைகள் குறித்து அவா்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பயண விவரம், பயணத்தின்போது பெற விரும்பும் உணவு குறித்து முன்பதிவின்போது தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்தத் தகவல் அனுப்பப்படும்.
பயண நேரத்தின்போது முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். ஏனெனில் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிஷங்கள் முன்பு வரைதான் அவ்வாறு முன்பதிவு செய்ய முடியும். அத்துடன் உணவுக்கு ஏற்பாடு செய்ய மிகக் குறைந்த நேரம்தான் இருக்கும்.
ரயில் புறப்படும் இடத்திலும், ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் உணவு அளிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
உணவு சேவைகள் பெறுவதை முன்பதிவின்போது தவிா்த்துவிட்ட போதிலும், பயணத்தின்போது உணவு பெற விரும்புவோருக்கு கூடுதலாக ரூ.50 சேவை கட்டணத்துடன் உணவு வழங்கப்படும் என்று ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் அறிவிக்கப்படலாம்.
பிஸ்கட்டுகள், பேக்கரி பொருள்கள், சிப்ஸ், பெப்சி-கோக்க கோலா போன்ற பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய ரயில்களில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதும், அவற்றை ரயில் கதவுகளுக்கு அருகில் வைப்பதும் பயணிகள் நடமாட்டத்துக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றை விற்பனை செய்வதும், இருப்பு வைப்பதும் 6 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.