2034-இல் மகளிருக்கான இடஒதுக்கீடு சாத்தியமாகும்: கபில்சிபல்

2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கபில்சிபல் கூறினார். 
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில்சிபல்
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில்சிபல்

புதுதில்லி: 2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில்சிபல் கூறினார். 

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கபில்சிபல், 2034 மக்களவைத் தேர்தலில்தான் மகளிர்  இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், இது வரவிருக்கும் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்ததா என்பது சந்தேகமாக உள்ளது. உண்மையான அக்கறை இருந்திருந்தால், இதை 2014 இல் நிறைவேற்றி இருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிச்சயமாக, "2029 மக்களவைத் தேர்தலுக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வராது. ஏன் என்றால், கடைசியாக 1976 இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது 84 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தொகுதி எல்லை நிர்ணயத்தை முடக்குவோம் என்று கூறியது. 2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை செய்யப்படம் வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2026 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கினால், அதை முடிப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிடும். 

"அது மட்டுமல்ல, வட மாநிலங்களில் பெரும் பகுதியினரின் சாதி வாரியான விவரங்களை அதில் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கையை பாஜக நிராகரித்தால், வட மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவும். எனவே, கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சாதி விவரங்களை சேர்த்தால், அதற்கு இன்னும் கால தாமதமாகும்,'' என்றார்.

எனவே, மகளிர் இட ஒதுக்கீடானது 2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் சாத்தியமாகும். 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். மக்களவைத் தேர்தல்வரை ஆட்சியை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால், 2023 இல் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய அவசியமே இல்லை" என்றார். 

இந்த மசோதா வரும் தேர்தலில் ஆளும் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுமா என்பது குறித்த கேள்விக்கு, "ஏன் இப்போது, இந்த அரசாங்கத்தைப் பொருத்தவரையில் ஒரு பொதுவான சோர்வு ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன், மேலும் 2014 இல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தபோது ஏன் அதை கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை. இந்த மசோதா வரும் தேர்தலில் பாஜகவுக்கு பலன் அளிக்கலாம், பலன் அளிக்காமலும் போகலாம் என்றார்.

பிதூரியின் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, மக்களவையில்  பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி பேசியது போன்ற அநாகரிக வார்த்தைகளை எனது 30 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் பார்த்தது இல்லை. இது போன்றவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிபல் கூறினார்.

"அந்த (டேனிஷ் அலியின்) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதேபோன்ற செயலைச் செய்திருந்தால், என்ன நடந்திருக்கும், மக்களவைத் தலைவர் என்ன செய்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்று சிபல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com