ஓவர் டோஸாகும் உப்பு.. எவ்வளவுதான் சாப்பிடணும்?

சராசரியாக ஒரு இந்தியர் நாள் ஒன்றுக்கு 8 கிராம் உப்பை உணவின் மூலம் உட்கொள்வதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஓவர் டோஸாகும் உப்பு.. எவ்வளவுதான் சாப்பிடணும்?


புது தில்லி: சராசரியாக ஒரு இந்தியர் நாள் ஒன்றுக்கு 8 கிராம் உப்பை உணவின் மூலம் உட்கொள்வதாகவும், ஆனால், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவு என்னவோ 5 கிராம்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேட்சுர் போர்ட்ஃபோலியோ மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் மூலம், இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 3 கிராம் உப்பை அதிகமாக உட்கொள்வது தெரிய வந்துள்ளது.

தேசிய தொற்றா நோய்கள் கண்காணிப்பு ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், 3,000 பெரியவர்கள் உட்கொள்ளும் உணவில் இருக்கும் உப்பு மற்றும், சிறுநீரில் வெளியேறும் சோடியம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விஷயங்களைக் கொண்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே இந்தியர்கள் உப்பை உட்கொள்வதும், பெண்களை விட (நாள் ஒன்றுக்கு 7.9 கிராம்) ஆண்களே (8.9 கிராம்) அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வதும் தெரிய வந்துள்ளது.

பணியாற்றுவோர் (8.6 கிராம்), புகைப்பழக்கம் உள்ளவர்கள் (8.3 கிராம்), உடல் பருமன் (9.2 கிராம்)  ஆகியோருக்கு ரத்தக் கொதிப்பும் அதிகமாக இருப்பதும் அவர்கள் அதிகளவில் உப்பை சேர்த்துக் கொள்வதும் தெரிய வந்திருப்பதாகவும், இவர்களை விட வேலையில்லாத, புகைப்பழக்கம் இல்லாத, உடல் பருமன் இல்லாதவர்களுக்கு ரத்தக் கொதிப்பு குறைவாகவே இருக்கிறது. நாள்தோறும் உணவில் உப்பை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயமும், அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு என்பது தேவை. அதுதான் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுக்கு அவசியமாகிறது.  

ஆனால், அதே அதிகளவில் உப்பு சேர்க்கும் போது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, சோடியம் குறைந்த உப்பை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

முதற்கட்டமாக இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 1.2 கிராம் உப்பையாவது குறைத்துக் கொள்வது 50 சதவீத பாதிப்புகளைத் தடுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதில்லாமல், ஏற்கனவே ரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுபவர்களும் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பாக்கெட் செய்து விற்பனையாகும் உணவுகளில் இருக்கும் உப்பு அளவைப் பார்த்து அதற்கேற்ப சாப்பிடுவதும் சாலச்சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com