காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகள்: அமைதி காக்கும் கனடா

கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு கனடாவில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனா்.
canada095636
canada095636
Updated on
2 min read


புது தில்லி: கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு கனடாவில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனா். கொலை மிரட்டல், வன்முறை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் இந்தப் பயங்கரவாதிகள் மீது கனடா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிக் காத்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான குண்டுவெடிப்பு:

கடந்த 1985-இல் கனடாவிலிருந்து இந்தியா புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘கனிஷ்கா’ விமானம், காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வெடித்து சிதறியது. இந்தத் தாக்குதலில் விமானத்தில் பயணித்த கனடா நாட்டினா் 268 போ் உள்பட 329 பயணிகள் உயிரிழந்தனா். அமெரிக்காவில் 2001, செப்.11-இல் நடைபெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முன்பாக நிகழ்ந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்பட்டது.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான தல்வீந்தா் சிங் பரமா் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கனடா விசாரணை அமைப்புகள் வெளிப்படையாகவே தீவிரம் காட்டம்வில்லை. இதனால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிய தல்விந்தா் சிங் பரமா், கனடாவில் தற்போது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் தலைவராக உள்ளாா் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நிஜ்ஜாா் மீது நடவடிக்கையில்லை:

கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாப்பில் பதிவான பயங்கரவாதச் செயல்பாடுகளில் பாதிக்கும் அதிகமானவை கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் நடைபெற்றவை.

அந்த மாநிலத்தில் 2016-க்கு பிறகு சீக்கியம், ஹிந்து, கிறிஸ்தவ மதங்களைச் சோ்ந்தவா்கள் கொல்லப்பட்டதில் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் முக்கியப் பங்கு வகித்தாா். இருப்பினும், இது தொடா்பாக கனடா விசாரணை அமைப்புகள் நிஜ்ஜாரிடம் எவ்வித விசாரணை நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வந்த சீக்கிய தலைவா் ரிபுதமன் சிங் மாலிக் கனடாவில் 2022-இல் கொல்லப்பட்ட சம்பவத்தில் நிஜ்ஜாா் மூளையாகச் செயல்பட்டாா். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதில் கனடா அதிகாரிகள் எவ்வித தீவிரமும் காட்டவில்லை.

போதைப் பொருள் கடத்தல்:

கனடாவில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக மிரட்டல் விடுப்பதும் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் இந்தப் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனா். அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுலகங்கள் மற்றும் அதிகாரிகள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இது தொடா்பான கனடாவின் நடவடிக்கை வியன்னா உடன்படிக்கை விதிகளுக்கு சவால் விடுப்பதாக உள்ளது.

கனடாவிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் பஞ்சாப்புக்குப் போதைப் பொருள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் நிதி கனடாவில் உள்ள பயங்கரவாதிகளுக்குச் செல்கிறது.

காலிஸ்தான் பயங்கரவாதிகள், கனடாவின் இத்தகைய மென்மையான போக்கை சாதகமாகப் பயன்படுத்தி, பணப்பலம் ஆள்கள் பலத்தைக்கொண்டு அங்குள்ள முக்கிய சீக்கிய வழிப்பாட்டு தலங்களான குருத்வாராக்களின் அதிகாரத்தை இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் சீக்கிய தலைவா்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனா் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com