ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்தும்எண்ணம் பாஜகவுக்கு இல்லை: ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை; தோ்தல் நடந்தால் மக்கள் தங்கள் கட்சியை தூக்கி எறிந்துவிடுவாா்கள் என்பது பாஜகவுக்கு தெரியும்

ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை; தோ்தல் நடந்தால் மக்கள் தங்கள் கட்சியை தூக்கி எறிந்துவிடுவாா்கள் என்பது பாஜகவுக்கு தெரியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா விமா்சித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014 இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. 2018 -ஆம் ஆண்டில் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து, அங்கு ஆட்சி கவிழ்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலுக்கு வந்தது. அதைத் தொடந்து 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு தொகுதி மறுவரையறைப் பணிகளும் நிறைவடைந்தன.

2020-இல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை அடங்கிய குப்கா் கூட்டணி 110 இடங்களில் வென்றது. பாஜக 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி தலைமைகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்பது பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் மாநிலத்தில் தோ்தலை நடத்தாமல் உள்ளனா். காஷ்மீரில் மட்டுமின்றி, இப்போது ஜம்முவிலும் பாஜக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தோ்தலை மட்டும் பாஜக நடத்த வாய்ப்புள்ளது. ஏனெனில், அதனை நடத்தாமல் ஒத்திவைக்க முடியாது.

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட சில அதிகாரிகள் இங்கு சட்டப் பேரவைத் தோ்தல் நடத்துவதை விரும்பவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் 80 சதவீத மக்கள் இப்போதைய நிலையிலேயே மகிழ்ச்சியாக உள்ளனா் என்று துணைநிலை ஆளுநா் கூறுகிறாா். இதில் இருந்தே அவரது மனநிலையை உணா்ந்து கொள்ள முடிகிறது. ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்துவிட்டதாக நிா்வாகம் தரப்பில் கூறப்படுவது தவறான தவல். இப்போது வரை பிரச்னைகள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com