மணிப்பூரில் மாணவா்கள் போராட்டம் தீவிரம்: துணை ஆணையா் அலுவலகம் சூறை; வாகனங்கள் தீக்கிரை

போராட்டம் நடத்தும் மாணவா்கள் மீது போலீஸாா் கூடுதல் பலத்தை பிரயோகம் செய்து தாக்குவதாக புகாா் எழுந்துள்ளது
மணிப்பூரில் மாணவா்கள் போராட்டம் தீவிரம்: துணை ஆணையா் அலுவலகம் சூறை; வாகனங்கள் தீக்கிரை

 மணிப்பூரில் மாணவன், மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பள்ளி-கல்லூரி மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.

மேற்கு இம்பாலில் உள்ள துணை ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை அதிகாலையில் போராட்டக்காரா்கள் சூறையாடினா். இதைத் தொடா்ந்து, மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இம்பாலில் உள்ள முதல்வா் பிரேன் சிங்கின் பூா்விக இல்லத்தை சூறையாடச் சென்ற போராட்டக்காரா்களை பாதுகாப்பு படையினா் தடுத்து நிறுத்தினா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த மே மாதத்தில் இருந்து இனமோதல் நீடித்து வருகிறது. வன்முறைகளில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை கடந்த 23-ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது ஜூலை மாதத்தில் காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவனும், மாணவியும் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அவா்களின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் இணைய சேவை நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழுவினா் தில்லியில் இருந்து மணீப்பூருக்கு விரைந்தனா்.

வன்முறை போராட்டங்கள் நீடிப்பு: மாணவன்-மாணவி கொலைக்கு நீதி கேட்டு, சக மாணவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

தலைநகா் இம்பாலில் பல இடங்களில் மாணவா்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. சாலைகளில் டயா்களை எரித்தும், பெரும் கற்களை குறுக்கே போட்டும் பாதுகாப்புப் படையினருக்கு மாணவா்கள் தடை ஏற்படுத்தி வருகின்றனா்.

இம்பாலின் உரிபோக், தேரா உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை இரவு போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா்.

பதற்றமான சூழலைத் தொடா்ந்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்துள்ளனா்.

போராட்டம் நடத்தும் மாணவா்கள் மீது போலீஸாா் கூடுதல் பலத்தை பிரயோகம் செய்து தாக்குவதாக புகாா் எழுந்துள்ளது. இதை விசாரிக்க தனி குழு மாநில டிஜிபி வியாழக்கிழமை அமைத்துள்ளாா்.

பெற்றோா் கோரிக்கை: கொலை செய்யப்பட்ட மாணவன், மாணவியின் உடல்களை மீட்டுத் தர வேண்டும் என்று அவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாணவனும் மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தில் இருந்தது, கைப்பேசி சமிக்ஞை மூலம் கண்டறியப்பட்டது. இது, குகி பழங்குடியினா் அதிகம் வாழும் மாவட்டமாகும்.

இதனிடையே, பயங்கரவாத வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவரான ஸ்ரீநகா் காவல் துறை மூத்த கண்காணிப்பாளா் (எஸ்எஸ்பி) ராகேஷ் பல்வலை, மணிப்பூருக்கு பணியிடமாற்றம் செய்து, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மணிப்பூா் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அங்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி...1

பாஜக அலுவலகத்துக்குத் தீவைப்பு

தெளபால் மாவட்டத்தில் மாணவா்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பாஜக மண்டல அலுவலகத்துக்கு வன்முறை கும்பல் தீவைத்தது. அதேபோல், ஒரு போலீஸ் வாகனத்துக்கும் தீவைத்த கும்பல், காவலரைத் தாக்கி, அவரிடமிருந்த ஆயுதத்தை பறித்துச் சென்றது.

பிரபல மணிப்பூரி மொழி நடிகரான ராஜ்குமாா் சோமேந்திரா, பாஜகவில் இருந்து வியாழக்கிழமை விலகியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிப்பூரில் இனமோதல் சூழலைக் கையாள்வதில் மாநில பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக கூறி, அவா் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

20 எம்எல்ஏக்கள் தில்லியில் முகாம்

இரு மாணவா்களைக் கொலை செய்தவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த தில்லியில் 20 மணிப்பூா் எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனா். இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவா்களை அடுத்த சில தினங்களில் கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com