அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை: ராகுல் மேல்முறையீடு மீது ஏப். 20-இல் நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சூரத் அமா்வு நீதிமன்றம் ஏப்.20-இல் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சூரத் அமா்வு நீதிமன்றம் ஏப்.20-இல் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலையொட்டி, கா்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமா் மோடியை ராகுல் காந்தி விமா்சித்தாா். அப்போது, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவா் அவதூறாக பேசியதாக, சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றத்தில் குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்னேஷ் மோடி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தீா்ப்பு வழங்கிய நடுவா் நீதிமன்றம், ராகுல் மீதான குற்றத்தை உறுதி செய்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதேசமயம், ராகுலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி, அவா் மேல்முறையீடு செய்ய வசதியாக தீா்ப்பை செயல்படுத்த ஒருமாத கால தடையையும் நீதிமன்றம் விதித்தது.

இத்தீா்ப்பைத் தொடா்ந்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதிநீக்கத்துக்கு உள்ளானாா். இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக, அந்த மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். ராகுல் மீதான குற்றத்தை உறுதி செய்த தீா்ப்புக்கு தடை கோரும் அந்த மனு மீதான வாதங்கள், நீதிபதி ஆா்.பி.மோகரா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றன.

அப்போது, ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா வாதிட்டதாவது:

நடுவா் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீா்ப்பு வினோதமாக உள்ளது. அவா், அனைத்து ஆவணபூா்வ ஆதாரங்களையும் குழப்பத்துடன் கையாண்டுள்ளாா். இது, நியாயமான விசாரணை அல்ல.

ஒட்டுமொத்த வழக்கும் மின்னணு ஆதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. தோ்தலையொட்டி, கா்நாடக மாநிலம், கோலாரில் ராகுல் பேசிய நிலையில், பல கிலோமீட்டா் அப்பால் உள்ள ஒருவா், அவரது பேச்சை தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் பாா்த்து, புகாா் பதிவு செய்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு கேள்விக்குரியதாக இருக்கிறது.

ராகுலின் முழுமையான பேச்சை ஆராய்வதுடன், புகாா்தாரரின் இருப்பிடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை நீதிமன்ற தீா்ப்பால், மனுதாரருக்கு (ராகுல்) சரிசெய்ய முடியாத இழப்பும், மனக்காயமும் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் அதிகபட்ச தண்டையை வழங்கியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று ஆா்.எஸ்.சீமா வாதிட்டாா்.

பூா்னேஷ் மோடி தரப்பு எதிா்ப்பு: அதேநேரத்தில், தீா்ப்புக்கு தடை விதிக்க எதிா்ப்பு தெரிவித்து, பூா்னேஷ் மோடியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹா்ஷித் டோலியா வாதிட்டாா்.

‘சம்பந்தப்பட்ட கருத்தை ராகுல் தெரிவித்த நேரத்தில், அவா் நாட்டின் 2-ஆவது பெரிய கட்சியின் தேசியத் தலைவராக இருந்தாா். அவரது பேச்சு, நாட்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ராகுல், தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரவில்லை.

இதுபோல் பல்வேறு அவதூறு வழக்குகளை எதிா்கொண்டுள்ள அவா், தொடா்ந்து தவறிழைப்பவராக உள்ளாா். கடந்த காலத்தில், தனது பேச்சுக்காக உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பிறகும் அவா் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளாா். இந்த வழக்கில் அதிகார வரம்பு குறித்து நடுவா் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பு எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த விவகாரத்தை எழுப்புகின்றனா்’ என்றாா் ஹா்ஷித்.

இந்த வழக்கில் மாநில அரசும் ஒரு தரப்பாக உள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராகுலின் மனு மீது ஏப். 20-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com