
தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை விரும்பாத தேசத்துக்கு எதிரான சக்திகள் மணீஷ் சிசோடியாவை சிறைக்கு அனுப்பிவிட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கல்வியை வழங்குவதில் மகாத்மா காந்தியைக் காட்டிலும் அம்பேத்கர் அசைக்க முடியாத அளவுக்கு தீர்மானமாக இருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என அம்பேத்கர் கனவு கண்டார். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் சரியாக ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படவில்லை. அவர்கள் அரசுப் பள்ளிகளை பாழாக்கி வைத்துள்ளனர். நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகம் பெருகி காணப்படுகின்றன. அவர்களின் இந்தத் தவறை சரிசெய்ய கடவுள் மணீஷ் சிசோடியா என்பவரை அனுப்பி வைத்தார். மணீஷ் சிசோடியா காலை 6 மணி முதல் தில்லியின் அரசுப் பள்ளிகளை பார்வையிட ஆரம்பித்தார். 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் நிலையை அவர் மாற்றினார்.
அம்பேத்கரின் கனவு தில்லியில் நனவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என எங்களால் கூற முடியும். ஆனால், நாட்டுக்கு எதிரான சில சக்திகள் நாட்டின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. அவர்கள் தலித் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை விரும்பவில்லை. இந்த காரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மணீஷ் சிசோடியாவை சிறைக்கு அனுப்பிவிட்டது. நாட்டுக்கு எதிராக செயல்படும் இந்த மாதிரியான நபர்கள் நாட்டினுடைய எதிரிகள் ஆவர். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இந்தியா பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. அவர்களுள் மிகச் சிறந்தவர் அம்பேத்கர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை வைக்க முடிவு செய்துள்ளோம். பலரும் நான் காந்தியை மறந்துவிட்டேன் எனக் கூறுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. நான் மகாத்மா காந்தியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் நாட்டுக்காக போராடியுள்ளார். நாட்டுக்காக பலத் தியாகங்களையும் செய்துள்ளார். ஆனால், அவரைக் காட்டிலும் நான் அம்பேத்கர் மீது அதிக மரியாதை செலுத்துகிறேன்.
அம்பேத்கர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் பல இன்னல்களை சந்தித்தார். இருப்பினும், அவர் படிப்பினை கைவிடவில்லை. அவர் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்துக்கு சென்று படித்தார். உங்களுக்கு இன்று இணைய வசதி உள்ளது. உங்களுக்குத் தெரியாதவைகளை கூகுளில் தேடி தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு கொலம்பியா பல்கலைக் கழகத்தைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் கொலம்பியா பல்கலைக் கழகம் குறித்து எப்படி தெரிந்திருந்தது. அது ஒரு மாயஜாலம் போல இருக்கிறது என்றார்.