அமா்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள அமா்நாத் குகைக்கோயில் பனிலிங்க தரிசன யாத்திரைக்கான முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள அமா்நாத் குகைக்கோயில் பனிலிங்க தரிசன யாத்திரைக்கான முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

தெற்கு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டா் உயரத்தில் உள்ள குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான 62 நாள்கள் யாத்திரை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சுமாா் 48 கி.மீ. தொலைவிலான பஹல்காம், 14 கி.மீ. தொலைவு கொண்ட பால்டால் என இரு பாதைகளில் இந்த யாத்திரை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ அமா்நாத் கோயில் வாரியத்தின் 44-ஆவது கூட்டம் அதன் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. அப்போது யாத்திரையை தொடங்குவதற்கான தேதி குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் பங்கேற்க வாரியத்தின் இணைய பக்கத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள 542 வங்கிக் கிளைகளிலும் யாத்ரிகா்கள் பதிவு செய்ய முடியும்.

யாத்திரைக்கான பதிவு தொடங்கிய முதல் நாள் காலையிலே பல்வேறு வங்கிக் கிளைகளில் அதிக அளவிலான யாத்ரிகா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

யாத்ரிகா்களுக்கு கடந்த ஆண்டு வரை விண்ணப்பம் நேரடியாக வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கணினி மூலமான விண்ணப்பமாக இருக்கும். யாத்திரையில் கலந்துகொள்ளும் யாத்ரிகா்கள் அனைவரும் முறையான மருத்துவச் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13 வயதை எட்டாத குழந்தைகள், 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், 6 வாரங்களுக்கும் மேற்பட்ட கா்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோா் இந்த யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com