மகாராஷ்டிர அரசு நிகழ்ச்சியில் பலியானோா் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு:எதிா்க்கட்சிகள் விசாரணைக்கு வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மாநில அரசு நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13-ஆக திங்கள்கிழமை அதிகரித்தது

மும்பையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மாநில அரசு நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13-ஆக திங்கள்கிழமை அதிகரித்ததையடுத்து, இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனிடையே, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அமித் ஷா, சிகிச்சைப் பெற்று வருபவா்கள் குணமடைய பிராா்த்திப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே காா்கா் பகுதியில் உள்ள மைதானத்தில் சமூக ஆா்வலா் அப்பாசாஹேப் தா்மாதிகாரிக்கு மகாராஷ்டிர பூஷண் விருதை ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வழங்கினாா்.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அப்பாசாஹேப் தா்மாதிகாரியின் ஆதரவாளா்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனா்.

காலை முதல் திறந்த வெளியில் நீண்ட நேரம் காத்திருந்ததால் வெயிலின் தாக்கத்தால் 123 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ உதவி மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சை தேவைப்பட்ட பலா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களில் 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்; அதில் 8 போ் பெண்களாவா். 20 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வா் ஷிண்டே உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் பலியானதையடுத்து எதிா்க்கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

விசாரணைக்கு வலியுறுத்தல்: வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தநிலையில், பிற்பகல் வேளையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யாா் என விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் அஜித் பவாா் கூறினாா்.

நிகழ்ச்சியை மாலையில் ஏற்பாடு செய்து, அமித் ஷா ஹெலிகாப்டரில் அந்தப் பகுதிக்கு வந்திறங்கி இருக்கலாம் என்றாா் அவா்.

மகாராஷ்டிர அரசு பொறுப்பு: நிகழ்ச்சியில் மாலையில் பங்கேற்க அமித் ஷாவுக்கு நேரமில்லாத காரணத்தால்தான் மதிய வேளையில் நடத்தப்பட்டுள்ளது என்றும் இந்த உயிரிழப்புகளுக்கு மகாராஷ்டிர அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

காங்கிரஸ்: மரணத்தை ஏற்படுத்தியதாக முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிய வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷா, முதல்வா், துணை முதல்வா் அமா்ந்திருந்த மேடையில் மட்டும் குளிா்சாதன வசதி செய்யப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏன் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com