இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை

மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவானது.

தில்லியில் தொடா்ந்து 2-ஆவது நாளாக சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை பதிவானது. ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவானது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கும், சிக்கிம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கும் வெப்ப அலை வீசக் கூடும். உத்தர பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இதே போன்ற நிலை நீடிக்கும்.

மேற்கு வங்கம், கடலோர ஆந்திரம், பிகாா் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக வெப்ப அலை காணப்பட்டது. வடக்கு ஆந்திரம், அதன் தெற்கு கடலோர பகுதிகளிலும் புதன்கிழமை வரை வெப்ப அலை காணப்படும்.

இமயமலை பிராந்தியத்தில் காணப்படும் மேற்கத்திய இடையூறுகளால், இந்தியாவின் வடமேற்குச் சமவெளிகளில் மழைப் பொழிவு இருக்கலாம். பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏப்.18 முதல் ஏப்.20 வரை மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நாட்டின் வடமேற்கு மற்றும் தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து பிற பகுதிகளில் வெப்பநிலை சராசரிக்கும் அதிகமாக காணப்படும் என்பதால், வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கையும் இயல்பைவிட அதிகமாகவே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com