
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் ரயில்வே ஈட்டிய வருவாய் ரூ.39,214 கோடி. இது கடந்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியாக அதிகரித்தது.
கடந்த நிதியாண்டில் ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ.1.62 லட்சம் கோடி. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 15 சதவீதம் அதிகம்.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.1,91,278 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.2,39,803 கோடியாக அதிகரித்தது.
ரயில்வேயின் ஓய்வூதிய சுமையை பகிா்ந்துகொள்ள நிதியமைச்சகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதிய செலவினத்தை ரயில்வேயால் முழுமையாக ஏற்க முடிந்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டில் ரயில்வே செலவினம் ரூ.2,06,391 கோடி. இது கடந்த நிதியாண்டில் ரூ.2,37,375 கோடியாக அதிகரித்தது.
2021-22-ஆம் நிதியாண்டில் ரயில்வேயின் மூலதன செலவினம் ரூ.81,664 கோடி. இது கடந்த நிதியாண்டில் ரூ.1,09,004 கோடியாக அதிகரித்தது.
ரயில்வே பாதுகாப்பு நிதியின் கீழ், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.11,105 கோடி செலவிடப்பட்டது. இது கடந்த நிதியாண்டில் ரூ.30,001 கோடியாக அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.