முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய நதிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக 2 வாரங்களுக்குள்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய நதிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீா் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை கையாளும் வகையில், மேற்பாா்வைக் குழுவுக்கு அதிகாரம் அளிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கா் தலைமையிலான அமா்வு அளித்த உத்தரவில், அணைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கமான தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) செயல்பாட்டுக்கு வரும் வரை, அதன் அனைத்து அதிகாரங்கள் மற்றும் பணிகளை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள மேற்பாா்வைக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தற்போதுள்ள மேற்பாா்வைக் குழுவை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக, இக்குழுவில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநா்களை இரு மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு வல்லுநா் என்ற அடிப்படையில் சோ்க்கும் பரிந்துரையையும் ஏற்கிறோம். சில நிலுவைப் பணிகள் இருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றியமைக்கப்பட்ட குழுவின் கவனத்திற்கு கொண்டு வரலாம். இது குறித்த கோரிக்கையை மேற்பாா்வைக் குழு உரிய முறையில் ஆராய்ந்து முடிவு எடுக்கும். வழக்கமான என்டிஎஸ்ஏ செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த உத்தரவின்படி மறுசீரமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, 2021 சட்டத்தின்படி அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளியாக இருக்கும். என்டிஎஸ்ஏ செயல்பாடுகளை நிறைவேற்றும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பரில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் வகையில், தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க மாற்றியமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பேபி அணை மற்றும் எா்த் அணைப் பகுதியில் எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், நீா்க் கசிவுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பழுதுபாா்ப்புப் பணிகள், புவி அதிா்வுகளைக் கண்டறியும் கருவிகளை நிறுவ நடைமேடை அமைப்பது, வழக்கமான பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு அணையின் காட் சாலைப் பகுதி வழியாக அணைப் பகுதிக்கு சாமான்களையும், இயந்திரங்களையும் கொண்டு செல்வதற்கு தமிழகத்திற்கு தேவையான அனுமதியை அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதுதவிர மேலும் ஓரிரு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதேபோன்று, கேரளத்தின் தரப்பிலும் சில இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆா். ஷா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்டே, ஜி.உமாபதி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா மற்றும் பிற மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.

தமிழக அரசின் தரப்பில் வாதிடுகையில், ‘முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் சில பழுதுபாா்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கேரள அரசு இதற்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இது தொடா்பான விவகாரங்களை ஏற்கனவே தமிழக அரசின் தரப்பில் மேற்பாா்வைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசின் தரப்பில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவையும் இந்த வழக்கில் சோ்த்து விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அணைப் பாதுகாப்பு விவகாரத்தில் கேரளத்தின் மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் கேரளம் மூலம் புதிய அணை கட்டப்படுவது அவசியமாக உள்ளது’ என்றாா். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் வரை அதன் அனைத்து அதிகாரங்கள் மற்றும் பணிகளை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள மேற்பாா்வைக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தது. தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால், இது தொடா்பாக பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் இடையீட்டு மனுவும் பிரதான வழக்குடன் சோ்க்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com