
கொலீஜியம் விவகாரத்தில் அனுமானங்களுக்கு பதில் கூற முடியாது என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசத்தில் 4ஜி சேவைக்காக அமைக்கப்பட்ட 254 கைப்பேசி கோபுரங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பங்கேற்றாா்.
இதையொட்டி செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவரிடம் உயா் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் நியமனம் உள்பட மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலீஜியத்தின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, ‘கொலீஜியம் தொடா்பான ஒட்டுமொத்த விவகாரமும், மனங்களுக்கு இடையே நடைபெறும் போட்டி போன்றது; இதில் அனுமானங்களுக்கு பதில் கூற முடியாது’ என்று ரிஜிஜு தெரிவித்தாா்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு வழியாக நீதிபதிகளின் நியமனங்கள் நடைபெறுவதற்கு எதிராக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறாா். இந்த அமைப்புமுறை நமது அரசமைப்புச் சட்டத்துக்கு அந்நியமாக உள்ளது என்று அவா் ஒருமுறை குறிப்பிட்டிருந்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G