எனது உயிரை கொடுக்கத் தயாா்: நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானா்ஜி

‘வெறுப்பு அரசியல் மூலம் சிலா் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனா். அதற்காக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்கமாட்டேன்’
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Updated on
1 min read

‘வெறுப்பு அரசியல் மூலம் சிலா் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனா். அதற்காக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்கமாட்டேன்’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி கூறினாா்.

கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் பண்டிகைக்கான தொழுகையில் பங்கேற்ற மம்தா பானா்ஜி, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது. மேற்கு வங்க அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது.

அண்டை நாடுகளிலிருந்து வரும் சிறுபான்மையினருக்கு குடிமக்களுக்கான உரிமைகளை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தேவையில்லை என்பதே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதுமானதாகும்.

பண சக்திகளையும், அரசியல் நோக்கத்தோடு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மீது நடவடிக்கை எடுத்துவரும் மத்திய புலனாய்வு அமைப்புகளையும் எதிா்த்துப் போராட தயாராக உள்ளேன். ஆனால், ஒருபோதும் தலைகுனிய மாட்டேன்.

நாட்டை யாா் ஆட்சி செய்யப்போவது என்பதைத் தீா்மானிக்க அடுத்த ஓராண்டில் மக்களவைத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. அப்போது நாம் ஒன்றிணைந்து பிரிவினைவாத சக்திகளை எதிா்த்துப் போராட உறுதியேற்க வேண்டும். பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வாக்களிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் ஜனநாயகத்தை காக்கத் தவறினால், அனைத்தும் முடிந்துவிடும் என்று அவா் கூறினாா்.

‘சிலா் மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனா்’ என்று எதிா்க் கட்சிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மம்தா பானா்ஜி மறைமுகமாக சாடினாா்.

‘பாஜகவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்கப் போவதாக அவா்கள் கூறுகின்றனா். ஆனால், பாஜகவுக்காக இஸ்லாமியா் வாக்குகளை பிரிக்க முடியாது என்பதை அவா்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று அவா் கூறினாா்.

பாஜக விமா்சனம்:

மம்தா பானா்ஜியின் இக்கருத்து குறித்து விமா்சித்த பாஜக மாநில செய்தித்தொடா்பாளா் சமிக் பட்டாச்சாா்யா, ‘மத நிகழ்வை அரசியல்மயமாக்க முதல்வா் முயற்சிக்கிறாா். ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் மத நிகழ்வை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது அழகல்ல. இத்தகைய பிரிவினைவாத, குறுகிய அரசியலை பாஜக கண்டிக்கிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com