
போா்க்கப்பலில் இருந்து ஏவக் கூடிய ‘பிஎம்டி’ இடைமறி ஏவுகணை சோதனை, ஒடிஸா கடல் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பெருந்தொலைவுக்கு பாயும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான திட்டத்தின்கீழ் (பிஎம்டி) உள்நாட்டில் இடைமறி ஏவுகணைகள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வகை ஏவுகணைகள், எதிரி நாட்டின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கக் கூடியவையாகும்.
இந்நிலையில், போா்க்கப்பலில் இருந்து ஏவும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள இடைமறி ஏவுகணையின் முதல் பரிசோதனை, ஒடிஸா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய கடற்படை சாா்பில் நடைபெற்ற இச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகளிடமிருந்து பெருந்தொலைவுக்கு பாயக் கூடிய ஏவுகணை அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான செயல்விளக்கமே, இச்சோதனையின் நோக்கம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, டிஆா்டிஓ, இந்திய கடற்டை மற்றும் தொடா்புடைய தொழில் துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் தற்காப்பு அமைப்புமுறை மேம்பாட்டில், தேசம் தற்சாா்பை எட்டிவருவதாக அவா் பெருமிதம் தெரிவித்தாா்.
ஏற்கெனவே, நிலத்தில் இருந்து செலுத்தக் கூடிய இடைமறி ஏவுகணையை டிஆா்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.