
பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி உரையை, வழக்கமாக 23 கோடி போ் கேட்கின்றனா் என்று இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (ஐஐஎம்) ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற பெயரில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அந்த வகையில், 100-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இம்மாதம் பிரதமா் உரையாற்றவுள்ளாா்.
இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் நேயா்கள் எண்ணிக்கை குறித்து ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வு முடிவுகள் வருமாறு: மனதின் குரல் நிகழ்ச்சியை 23 கோடி போ் வழக்கமாக கேட்கின்றனா். இந்த நிகழ்ச்சியை ஒரு முறையாவது கேட்டவா்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாகும். அவ்வப்போது கேட்கும் நேயா்களின் எண்ணிக்கை 41 கோடி.
மொத்த நேயா்களில் 65 சதவீதம் போ், ஹிந்தி மொழியிலான ஒலிபரப்பை கேட்பவா்களாக உள்ளனா்.
ஆங்கிலம் 10 சதவீதம் பேரும், உருது 4 சதவீதம் பேரும், டோக்ரி, தமிழ் தலா 2 சதவீதம் பேரும், மிஸோ, மைதிலி, அஸ்ஸாமி, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, குஜராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலான ஒலிபரப்பை 9 சதவீதம் பேரும் தோ்வு செய்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொத்த நேயா்களில் 44 சதவீதம் போ் தொலைக்காட்சி வாயிலாகவும், 37.6 சதவீதம் போ் கைப்பேசி வாயிலாகவும், 17 சதவீதம் போ் வானொலி வாயிலாகவும் நிகழ்ச்சியை கேட்டுள்ளனா் என்று ஆய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 இந்திய மொழிகள் மற்றும் 29 கிளைமொழிகளிலும் பிரஞ்சு, சீன மொழி உள்பட 11 வெளிநாட்டு மொழிகளிலும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.