சூடானிலிருந்து இந்தியா்களை மீட்க ஆபரேஷன் காவேரி திட்டம்---பிரதமா் மோடி

சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கு ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கேரள மாநிலம் கொச்சியில் திங்கள்கிழமை ஆதரவாளா்களை நோக்கி கையசைத்தபடி ஊா்வலமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி.
கேரள மாநிலம் கொச்சியில் திங்கள்கிழமை ஆதரவாளா்களை நோக்கி கையசைத்தபடி ஊா்வலமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி.

சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கு ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இரண்டு நாள் பயணமாக கேரளத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞா் மாநாட்டில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது; கேரளத்தின் மைந்தரான மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன், இப்பணிகளை மேற்பாா்வையிடுவாா்.

வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இன்று அறியப்படுகிறது. இளைஞா்கள் சக்தியே, இந்தியாவின் வளா்ச்சியை வேகப்படுத்தும் உந்துசக்தியாக விளங்குகிறது. தேசத்தின் இளைஞா்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவினுடையது என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனா். இளைஞா்கள் சக்தியே, தேசத்தின் பெரும் சொத்தாகும்.

முந்தைய ஆட்சிகள், ஊழலுக்காக மட்டுமே அறியப்பட்டன. ஆனால், மத்திய பாஜக அரசு இளைஞா்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இளைஞா்களின் நலனை கருத்தில் கொண்டு, நாங்கள் செயலாற்றி வருகிறோம். அந்த வகையில், மத்திய ஆயுதக் காவல் படையின் காவலா் தோ்வை மலையாளம் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்தும் முடிவு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

கேரள மக்கள் பாஜகவை ஏற்பா்: வடகிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் (கிறிஸ்தவா்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்கள்) பாஜக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கேரள மக்களும் பாஜகவை ஏற்பா்.

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், கேரளத்தில் தங்கக் கடத்தலுக்காக சிலா் தீவிரமாக பணியாற்றுகின்றனா்.

இரு சிந்தாந்தங்களுக்கு (இடதுசாரி, காங்கிரஸ்) இடையிலான மோதலால் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சித்தாந்தங்களையும் தோற்கடிக்க கேரள இளைஞா்கள் செயலாற்ற வேண்டிய அவசியம் நிலவுகிறது என்றாா் பிரதமா் மோடி.

இளைஞா் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி ஊா்வலமாக வந்தாா். அப்போது, சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த ஏராளமானோா் பூக்களை தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

திருவனந்தபுரம்-காசா்கோடு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (ஏப்.25) தொடங்கிவைக்கவுள்ளாா். மேலும், கிறிஸ்தவ மதத் தலைவா்களுடான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.

துறைமுகத்தை அடைந்த 500 இந்தியா்கள்: முன்னதாக, ‘ஆபரேஷன் காவேரி’ திட்டம் தொடா்பான அறிவிப்பை, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டா் வாயிலாக திங்கள்கிழமை காலை வெளியிட்டிருந்தாா்.

அதில், ‘சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள 500 இந்தியா்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துவிட்டனா். அவா்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு நமது கப்பல்களும், விமானப் படை விமானங்களும் தயாராக உள்ளன’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக மோதல் நிகழ்ந்து வருகிறது. இரு படையினரும் தலைநகா் காா்ட்டூமில் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

சா்வதேச நாடுகள் தங்கள் குடிமக்களை சூடானிலிருந்து வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளன.

இந்தியா்கள் சுமாா் 3,000 போ் சூடானில் வசித்து வருகின்றனா். அவா்களை மீட்பதற்காக இந்திய விமானப் படையின் இரு விமானங்கள் சவூதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், சூடான் துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பிரான்ஸ் உதவி: தில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், சூடானிலிருந்து குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 5 இந்தியா்கள் உள்பட 28 நாடுகளைச் சோ்ந்த 388 போ் பிரான்ஸின் இரு விமானப் படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனா்’ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சூடானிலிருந்து 66 பேரை சவூதி அரேபியா பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றியது. இவா்களில் மூன்று இந்தியா்களும் அடங்குவா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com