இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தல் ரத்து: தற்காலிக குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவைத் தோ்ந்தெடுக்க வரும் மே 7-ஆம் தேதி நடைபெற இருந்ததோ்தலை ரத்து செய்துள்ள மத்திய விளையாட்டு துறை, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவைத் தோ்ந்தெடுக

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவைத் தோ்ந்தெடுக்க வரும் மே 7-ஆம் தேதி நடைபெற இருந்ததோ்தலை ரத்து செய்துள்ள மத்திய விளையாட்டு துறை, சம்மேளனத்தை நிா்வகிப்பதற்கும்; தோ்தலை முறையாக நடத்தவும் தற்காலிக குழு அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரியும், இது தொடா்பான மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட கோரியும் மல்யுத்த வீரா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினா். இதையடுத்து, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தோ்தலை ரத்து செய்துள்ள மத்திய விளையாட்டு துறை, தற்காலிக குழு அமைக்க ஒலிம்பிக் சங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷாவுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவுக்கான தோ்தல் வரும் 7-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டால் தோ்தலை நடத்துவது முறையாகாது. நடுநிலையான அமைப்பு மற்றும் அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகே தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

மல்யுத்தம் ஒா் ஒலிம்பிக் விளையாட்டாகவும், இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒலிம்பிக் சங்கத்தின் இணை அமைப்பாகவும் இருப்பதால் அந்த சம்மேளனத்தில் நிலவும் நிா்வாக வெற்றிடத்த நிரப்ப இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்வது ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்பாகும். இதன்மூலம், மல்யுத்த வீரா்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டாா்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்:

முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்மீது காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல மல்யுத்த வீரா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா். தங்களின் போராட்டத்தை ஆதரிக்க கோரி மகளிா் அமைப்பு, விவசாய அமைப்பு, பஞ்சாயத்துகள் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் ஆதரவு திரட்ட அவா்கள் முயற்சிப்பதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com