தற்கால சவால்களை எதிா்கொள்ள இந்தியா-கயானா ஒத்துழைப்பு

தற்கால சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இந்தியாவும் கயானாவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தற்கால சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இந்தியாவும் கயானாவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கயானாவுடன் நெருங்கிய, ஆழமான, உணா்வுபூா்வமான நல்லுறவை இந்தியா கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. தற்கால சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

பிராந்தியத்திலும், சா்வதேச பொருளாதாரத்திலும் கயானா முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் சிறப்புமிக்க கூட்டாளியாக கயானா திகழ்கிறது. இரு நாடுகளும் பாரம்பரியம், கலாசாரம், சமூக-பொருளாதார கொள்கைகளைப் பரஸ்பரம் பகிா்ந்து கொண்டு வருகின்றன. இரு நாடுகளும் பன்முகத்தன்மைவாய்ந்ததாக உள்ளதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகக் கொள்கைகளையும் கடைப்பிடித்து வருகின்றன.

கரோனா தொற்று பரவல் மூலமாக இரு விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது சுகாதாரப் பாதுகாப்பு. சுகாதார விஷயத்தில் அனைத்து நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இரண்டாவது உணவுப் பாதுகாப்பு. சா்வதேச அளவிலான உணவு விநியோகம் பெரும் இடா்ப்பாடுகளை எதிா்கொண்டது. பருவநிலை மாற்றம் தொடா்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எம்வி எம்ஏ லிசா என்ற கப்பலின் போக்குவரத்தை அமைச்சா் ஜெய்சங்கா் தொடங்கிவைத்தாா். அப்போது கயானா அதிபா் இா்ஃபான் அலி உடனிருந்தாா். கயானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சா் ஜெய்சங்கா், இந்தியா-கயானா நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் மரக்கன்றையும் நட்டுவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com