
கா்நாடக பேரவைத் தோ்தலில் புலிகேசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜகவின் வேண்டுகோளுக்கு இணங்க தனது வேட்புமனுவை அவா் திரும்பப் பெற்றுள்ளதாக அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா்கள் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் புலிகேசி நகா் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். அது தொடா்பாக தலைமை பரிசீலித்து உத்தரவிட்டதன் அடிப்படையில், அதிகாரபூா்வ வேட்பாளரான அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.