
புது தில்லி: அதானி, சீனா உள்ளிட்ட பல விவகாரங்களில் பிரதமர் மோடி மௌனமாகவே இருப்பதாகவும், எனவே, மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, பிரதமர் அலுவலக தகவல் தொடர்புத் துறை, ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்த அதிகநேரம் வேலை செய்து வருகிறது. அதேவேளையில், அதானி, சீனா, சத்யபால் மாலிக் உள்ளிட்ட பல விவகாரங்களில் இன்னமும் மௌனமே நிலவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தையும் வெளியிடுகிறது.