
உத்தரகண்டின் புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சார்தாம் கோயிலில்களில் கேதார்நாத் ஆலயமும் ஒன்று. முன்னதாக அட்சய திருதியை அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆலயங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கேதார்நாத் கோயிலின் நடை திறக்கப்பட்டது.
கோயிலின் தலைமை பூசாரி ராவல் பீமா சங்கர் லிங் கேதார்நாத் கோயிலை திறந்து பாரம்பரிய சடங்குகளை செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கோயிலின் நடையை திறந்துவைத்து வழிபாடு மேற்கொண்டார்.
கோயில் திறக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் கேதார்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இமயமலையில் கூடியிருந்து பிரார்த்தனை செய்தனர். கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும், பக்தர்கள் மலையேறும் பாதையில் இருந்து பனி அகற்றப்பட்டுள்ளது.
அடுத்த சில நாள்களுக்கு இப்பகுதியில் சீரற்ற வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் ரிஷிகேஷ், பத்ரகாளி மற்றும் வைசி ஆகிய இடங்களில் உள்ள முக்கிய தலங்களில் தற்போதைக்கு தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.