
படம்: ட்விட்டர்/ ஜெய்சங்கர்
சூடான் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த 392 இந்தியர்கள் சி17 விமானம் மூலம் இன்று தில்லி வந்தனர்.
ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படையின் கனரக போக்குவரத்து விமானங்கள் மூலம் இந்தியா்கள் மீட்கப்பட்டு வருகின்றனா். சூடானில் இருந்து மீட்கப்படுவதற்காக, காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்தில் இணையவழியில் சுமாா் 3,100 இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா்.
இதுதவிர மேலும் 300 இந்தியா்கள் தூதரகத்துடன் தொடா்பில் உள்ளனா். சூடானில் 900 முதல் 1,000 வரையில் இந்திய வம்சாவளி நபா்களும் உள்ளனா். மோதல் நிகழும் காா்ட்டூம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் போா்ட் சூடான் நகருக்கு இந்தியா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். அங்கிருந்து விமானப் படையின் கனரக போக்குவரத்து விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்தியா்கள் அழைத்து வரப்பட்டு, பின்னா் விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனா்.
ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் டெக், ஐஎன்எஸ் தாா்காஷ் ஆகிய கப்பல்களும், விமானப் படையின் இரு சி130ஜே விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சூடான் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த 392 இந்தியர்கள் சி17 விமானம் மூலம் ஜெட்டா நகரில் இருந்து இன்று தில்லி வந்தனர். இந்த தகவல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். இதில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...