
கோப்புப் படம்.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியாவில் மிகவும் துரிதமாக 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ‘கூ’ சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘உலகின் வேறு எந்த நாட்டில் இல்லாத வகையில் இந்தியாவில் 5ஜி சேவை வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் 714 மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 5ஜி சேவைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி 5ஜி தொடங்கப்பட்ட நிலையில், 10 மாதங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளோம். முதல் 5 மாதங்களில் 1 லட்சம் இடங்களிலும், அடுத்த 3 மாதங்களில் மேலும் 1 லட்சம் இடங்களிலும் 5ஜி சேவை விரிவாக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இப்போது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.