
புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதிலுள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கிலோ மீட்டா் தூரமும், அதிகபட்சம் 1,27,609 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
தற்போது அதற்கு அடுத்தபடியாக விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.1) நள்ளிரவு 12.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈா்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
‘சந்திரயான்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் தனது இறுதி பயணத்தை நிறைவு செய்தது. தற்போது நிலவை நோக்கி விண்கலம் பயணித்து வருகிறது. சரியான பாதையில், சீரான வேகத்தில் சந்திரயான் செல்கிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் ஆக. 5-ஆம் தேதி உந்தித் தள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னா் திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும்.
சந்திரயான்-3 விண்கலம் திட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நிலவு சுற்றுப் பாதை மாற்றம் திட்டமிட்டபடி நிறைவு செய்யப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G