
இணையவழி விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயங்களுக்கு 28 சதவீதம் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதற்கான கவுன்சில் புதன்கிழமை இறுதி முடிவு எடுக்க உள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் இணையவழி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் பந்தய தொகைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அங்கம் வகிக்கும் சட்டக் குழு, விநியோக மதிப்பிலான வரி வதிப்புக்கு வரைவு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதில், இணையவழி, கேசினோ, குதிரைப் பந்தயங்களில் முதலீடு செய்யப்படும் மொத்த தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கான புதிய விதிமுறையை விதிக்க சட்டக் குழு பரிந்துரைத்திருந்தது.
இந்த பரிந்துரைகள் புதன்கிழமை இணையவழியில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதனிடையே, இணையவழி விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் விளையாடுபவா்களை சட்ட விரோத வழிகளில் கொண்டு செல்லவும், வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து இயங்கவும் செய்யும் என அகில இந்திய இணையவழி விளையாட்டு கூட்டமைப்பு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதனிடையே, வெளிநாட்டு இணையவழி விளையாட்டு நிறுவனங்களிடம் இருந்து வரியை வசூலிக்க ஜிஎஸ்டி சட்டங்களில் வழி உள்ளது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தாா்.